ADDED : நவ 05, 2025 12:20 AM

திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள் நடந்தன.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு இடையேயான மாணவ, மாணவியர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இக்கல்வியாண்டில், திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள், தாராபுரம் ரோடு, விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது. கடந்த 3ம் தேதி மாணவர்களுக்கும், நேற்று மாணவியர்க்கும் மூன்று பிரிவுகளில், அவர்களது எடைக்கேற்ப 'நாக்-அவுட்' முறையில் நடத்தப்பட்டது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், பள்ளி முதல்வர் சின்னையா, மேலாளர் முத்துபாரதி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் 14 வயது பிரிவில் 34 பேர், 17 வயது பிரிவில் 51 பேர், 19 வயது பிரிவில் 16 பேர் என 101 மாணவர்களும், மாணவியர்க்கான போட்டியில், 14 வயது பிரிவில் 23 பேர், 17 வயது பிரிவில் 23 பேர், 19 வயது பிரிவில் 18 பேர் என 64 மாணவியர் கலந்துகொண்டனர். வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் வீரர்கள், வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

