/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைவர்களை உருவாக்கும் 'பிரம்மா'க்கள்
/
தலைவர்களை உருவாக்கும் 'பிரம்மா'க்கள்
ADDED : செப் 04, 2025 11:47 PM

ப ல நேரங்களில், உளியாக மாறியும், வலிகளைத் தாங்கியும், மாணவர்களை ஆசிரியர்கள் செதுக்குகின்றனர். கற்கும் நேரத்தில் கற்பிக்கும் ஆசான் குறித்து அறிந்திடாத மாணவர்கள், கல்விப்பயணத்தை முடித்து உயரிய சிம்மாசனத்தில் அமரும்போதுதான், தங்களுக்காக மெழுகான ஆசிரியர்களை அறிந்து நெஞ்சார உருகுகின்றனர். தேசத்திற்கே வழிகாட்டும், எதிர்காலத் தலைவர்களை உருவாக்குபவர்கள் அல்லவா இந்த 'பிரம்மா'க்கள்? ஆசிரிய நல்லுள்ளங்கள், நம்முடன் பகிர்ந்தவை:
மருத்துவக்கனவு நனவாகிறது
சுரேஷ்குமார், மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர்: கடந்த, 2014 முதல் மருத்துவ படிப்புக்கு அரசுப்பள்ளி மாணவ, மாணவியரை தயார்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில், 96 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 11, 12ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாட புத்தகத்தில் உள்ள பாடத்துடன், 'நீட்', ஐ.ஐ.டி., ஜெ.இ.இ., போட்டி தேர்வுக்குரிய பயிற்சியை ஆசிரியர்கள் வழங்குகின்றனர். ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி, தேர்வு நெருங்கும் இரு மாதத்தில் தொடர் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்குகின்றனர்.
'நீட்' தேர்வு, அதில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இதுவரை, 150 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் மருத்துவ படிப்புக்குள் நுழைந்துள்ளனர். இந்திய மருத்துவம் எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ படிப்புக்குள், 200 பேர் வரை நுழைந்துள்ளனர். மாணவர்களின் மருத்துவ கனவை ஆசிரியர்கள் பூர்த்தி செய்கின்றனர்.
ஆசிரியப்பணியே அறப்பணி
ஆழ்வை கண்ணன், அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர்: வலுவான சமுதாயம், வளமான தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு, ஆசிரிய சமூகத்துக்கே உண்டு. நல்லதொரு மாணவ சமுதாயத்தை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் அறிவுரை கூறினால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு வர வேண்டும். ஆசிரிய பணியே அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி என்பார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் நீதி போதனை வகுப்பு மிக அவசியம். வாழ்க்கையில் இரு இடங்கள் முக்கியமானவை. ஒன்று தாயின் கருவறை; மற்றொன்று வகுப்பறை. நல்ல ஆசிரியர்களின் வியர்வை துளிகள், மாணவர்களின் விடைத்தாளில் தெரியும்.
கனவைத் துரத்தி பிடித்தேன்
கல்லுாரிப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட மணிவண்ணன்: நான் ஆசிரியர் குடும்பத்தை சேர்ந்தவன்; தன் மகன், டாக்டராக, பொறியாளராக வேண்டும் என்ற எண்ணம், என் பெற்றோருக்கும் இருந்தது. மிக சராசரியாக படிக்கும் கடைநிலை மாணவன் நான்.
விடுமுறையில், என் அப்பா பணிபுரியும் பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து கவனிப்பேன்; என் அப்பா, அம்மாவின் தமிழ்ப் பேச்சு, உச்சரிப்பு, இசைப்பாட்டு போன்றவை என்னை ஈர்த்தது. ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் அப்போதே என்னுள் எழுந்தது. பிளஸ் 2 வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால், பெற்றோரின் கனவு தகர்ந்தது.
என் அப்பாவின் பரிந்துரையில், புதுக்கோட்டையில் திருநாவுக்கரசு என்ற தமிழாசிரியர் வாயிலாக அங்குள்ள தமிழ்க்கல்லுாரியில் இணைந்தேன்; இளங்கலை, முதுகலை, பி.எட்., பட்டம் பெற்றேன்.
தொலைதுார கல்வியில் எம்.எட்., எம்.பில்., முடித்தேன். 15 ஆண்டுகள், இரு சுயநிதி கல்லுாரியில் பணிபுரிந்த பின், பி.எச்டி., முடித்து, தேர்வு வாரியம் வாயிலாக எந்த சிபாரிசுமின்றி, அரசுக்கல்லுாரியில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. என் கனவை துரத்தி பிடித்து, அதை எட்ட செய்தவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம்.