ADDED : மார் 14, 2026 06:22 AM

உடுமலை: உடுமலையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, பலருக்கு வாழ்வு கிடைத்துள்ளது.
உடுமலையை சேர்ந்த விக்னேஷ் - பிரிய தர்ஷினி தம்பதியரின், ஆறு வயது மகன் சிவாதித்யா. கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அவர், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து, சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் அனுமதியளித்ததால், இருதயம், கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இறந்தும் பலருக்கு சிறுவன் வாழ்வளித்துள்ள நிலையில், தியாகத்தை போற்றும் வகையில், உடுமலை கோட்டாட்சியர் குமார், தாசில்தார் கவுரி சங்கர், இன்ஸ்பெக்டர் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், சிறுவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
