/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரை நோக்கி வரும் 'பிராண்ட்' ஆர்டர்கள்
/
திருப்பூரை நோக்கி வரும் 'பிராண்ட்' ஆர்டர்கள்
ADDED : அக் 07, 2025 11:44 PM
திருப்பூர்; வங்கதேசத்தின் தரைவழி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த நான்கு மாதங்களாக, இந்தியாவின் 'பிராண்ட்' நிறுவனங்கள், திருப்பூருக்கு ஆர்டர் வழங்கி, ஆடை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளன.
இந்தியா- வங்கதேசம் இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும், ஒப்பந்தம் வாயிலாக வங்கதேசம் மட்டுமே அதிகம் பயனடைந்து வருகிறது.
ஜி.எஸ்.டி., அமலான பின், வங்கதேச ஆடைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. வரிச்சலுகையுடன், தரைவழியாக, தினமும் ஆடைகள் வந்துகுவிந்தன. கொரோனாவுக்கு பிறகு, இது அதிகரித்தது.
நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளில், வங்கதேச ஆடைகள், கடும் போட்டியாக மாறின. ஏற்றுமதி வர்த்தகத்தில், முக்கிய போட்டி நாடாக மாறியிருந்த வங்கதேசம், கடந்த, 2017ம் ஆண்டு முதல், உள்நாட்டு சந்தையிலும் பெரிய போட்டியை உருவாக்கியது. குறிப்பாக, ஜி.எஸ்.டி., அமலான பிறகு, வங்கதேச ஆடை இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்ந்தது; படிப்படியாக, வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.
முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள், வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து, நமது நாட்டில் விற்பனை செய்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி, 5,200 கோடி ரூபாயை தாண்டியது. இதன் எதிரொலியாக, உள்நாட்டு சந்தைகளில், வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறியது.
வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு, நிலைமை தலைகீழாக மாறியது; இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின், அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.
முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்களும், வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாதென உணர்ந்ததால், மீண்டும் 'பிராண்ட்' நிறுவனங்களின் ஆர்டர்கள் வர துவங்கியுள்ளது.
இதுகுறித்து, 'சைமா' சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த, நான்கு மாதங்களாக, ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல, வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்துவந்த, முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள், நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன; ஆர்டர்களை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ரிலையன்ஸ் போன்ற நிறுவனத்துக்கு, ஏற்கனவே திருப்பூரில் உற்பத்தி செய்து வருகிறோம். வங்கதேசத்துடன் தொடர்பில் இருந்த மேலும் சில முக்கிய 'பிராண்ட்' நிறுவனங்களும், தரமான ஆடை தயாரிக்க திருப்பூருக்கு வந்து ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன. வங்கதேச ஆடைக்கு கட்டுப்பாடு விதித்த பிறகுதான், திருப்பூருக்கான வாய்ப்புகள் தடையின்றி கிடைத்து வருகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.