/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலை உணவுத்திட்ட பணியாளர் விடுப்பு; உணவு பரிமாறிய தலைமையாசிரியை
/
காலை உணவுத்திட்ட பணியாளர் விடுப்பு; உணவு பரிமாறிய தலைமையாசிரியை
காலை உணவுத்திட்ட பணியாளர் விடுப்பு; உணவு பரிமாறிய தலைமையாசிரியை
காலை உணவுத்திட்ட பணியாளர் விடுப்பு; உணவு பரிமாறிய தலைமையாசிரியை
ADDED : ஜூன் 09, 2025 11:41 PM

பல்லடம்; பல்லடத்தில் காலை உணவுத்திட்ட பணியாளர் விடுப்பில் சென்றதால், பள்ளி தலைமையாசிரியரே மாணவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.
கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியம், போகம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ், 40க்கும் மேற்பட்டோர் உணவருந்துகின்றனர். காலை உணவு தயார் செய்யும் பணியாளர் நேற்று விடுப்பில் சென்றார். இதனால், மாணவர்களுக்க உணவு வழங்க முடியாத நிலை உருவானது.
மாணவர்களுக்கு சங்கடத்தை உருவாக்க விரும்பாத பள்ளி தலைமையாசிரியை செல்லம்மாள், தனது சொந்த செலவில், மாணவர்களுக்கு எலுமிச்சை சாதம் ஏற்பாடு செய்து, அதை தானே பரிமாறவும் செய்தார். இதையறிந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் அவரை பாராட்டினர்.
தலைமையாசிரியையிடம் கேட்ட போது, ''பள்ளியில், காலை உணவுத்திட்டத்துக்கென பணியமர்த்தப்பட்ட பணியாளர், கடந்தாண்டே பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட்டார். இன்று (நேற்று) அவரும் பணிக்கு வரவில்லை. காலை உணவருந்தாமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சங்கடப்பட்டு, ஏமாற்றமடைவதை தவிர்க்கவே, அவர்களுக்கு எலுமிச்சை சாதம் ஏற்பாடு செய்து வழங்கினேன்,'' என்றார்.
பெற்றோர் சிலர் கூறுகையில், 'தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால், எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். நிரந்தர பணியாளர் இல்லாமல், காலை உணவுத்திட்டத்தில் தடுமாற்றம் தென்படும் நிலையை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.