/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைப்பு வீணாகும் குடிநீர்
ADDED : அக் 03, 2024 05:27 AM
உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம், புதுப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பொட்டையம்பாளையம் நீருந்து நிலையத்தில் இருந்து, கிராமங்களுக்கு செல்லும் பிரதான குழாய் உடைந்து, குடிநீர் வினியோகம் பாதிக்கிறது.
குறிப்பாக, பொட்டையம்பாளையம்-கொங்கல்நகரம் ரோட்டில் மேடான பகுதியில் அடிக்கடி பிரதான குழாய் உடைந்து விடுகிறது. அந்த இடத்தில், மெகா குழியில், தடுப்பணை போல குடிநீர் தேங்கி நிற்கிறது. இதே போல், ரோடு சந்திப்பு பகுதியிலும், குழாய் உடைப்பு நீண்ட காலமாக சீரமைக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களாக, கொங்கல்நகரம் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது.
இது குறித்து புகார் தெரிவித்தாலும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. அப்பகுதியிலுள்ள புதுப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு பிரதான குழாய் உடைப்பே காரணமாக உள்ளது.
திட்டம் பயன்பாட்டுக்கு வந்த போதே, தொழில்நுட்ப பிரச்னைகளால், இத்தகைய உடைப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் முழுமையாக அப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும். மேடான பகுதியில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்க, பிரதான குழாயை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது அவசியமாகும்.
போதிய மழை இல்லாமல், உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்கள் வற்றி, சில ஊராட்சிகளில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இப்பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.