/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி
/
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி
ADDED : அக் 06, 2024 03:30 AM

குழந்தைகள் துன்புறுத்தப்படுதல், போதை பொருளுக்கு அடிமையாதல், சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றை முன்னெடுத்து, குற்றமில்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் திருப்பூரில் 'ஆபரேஷன் ஜீரோ கிரைம்' என்ற புதிய திட்டம் சில நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான எந்த வித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரச்னைகளில் இருந்து மீண்டு வர உரிய ஆலோசனை வழங்குவதும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
கலெக்டர், கமிஷனர், முதன்மை கல்வி அலுவலர், கல்லுாரி முதல்வர்கள் அடங்கிய முக்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகர், தனிப்படை போலீஸ் மற்றும் விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூன்று துணை குழுக்கள் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு குழுவில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள், துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் என இடம் பெற்றுள்ளனர். கவுன்சிலிங் வழங்கவும், கலெக்டர் வளாகத்தில், இரண்டு ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சுழலும் போலீசார்
----------------
ஒவ்வொரு துணை குழுவில் இடம்பெற்றுள்ள போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியரை சந்தித்து வருகின்றனர். இதுதவிர பள்ளி தலைமையாசிரியர் மூலமாக பெற்றோர்களை தனியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
விழிப்புணர்வு கூட்டங்களில், அனைவருக்கும் ஒரே விதமான கருத்துக்களை போலீசார் தெரிவிக்காமல், ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு விதமாக, அவர்களிடம் எந்த விதமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், எப்படி அணுக வேண்டும் மற்றும் பெற்றோர்களிடம் சமூக சூழல், பிள்ளைகளிடம் பழகுவது, அவர்களை கையாளுவது என, பிரத்யேகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தங்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியரை சந்தித்து உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வழக்குகளின் பின்னணி
-------------------
மேலும், ஸ்டேஷன்களில் வரக்கூடிய பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவோடு நிறுத்தாமல், அதன் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அதில் ஈடுபட்ட நபரின் குடும்ப சூழல், பழக்க வழக்கம் போன்ற அனைத்தையும் கருத்தில் கொள்கின்றனர். அவரை கைது செய்து சிறையில் அடைப்பதை மட்டும் கொள்ளாமல், மீண்டும் அவர் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க அவருக்கு தேவையான கவுன்சிலிங் வழங்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
---
'ஆபரேஷன் ஜீரோ கிரைம்' திட்டத்துக்கான லோகோ