/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையங்களுக்கு சுற்றுச்சுவர் அமையுங்க! சமூக நலத்துறையினருக்கு வலியுறுத்தல்
/
அங்கன்வாடி மையங்களுக்கு சுற்றுச்சுவர் அமையுங்க! சமூக நலத்துறையினருக்கு வலியுறுத்தல்
அங்கன்வாடி மையங்களுக்கு சுற்றுச்சுவர் அமையுங்க! சமூக நலத்துறையினருக்கு வலியுறுத்தல்
அங்கன்வாடி மையங்களுக்கு சுற்றுச்சுவர் அமையுங்க! சமூக நலத்துறையினருக்கு வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2024 09:00 PM
உடுமலை:அங்கன்வாடி மையங்களுக்கு, பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில் மட்டுமே, 143 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும், தலா 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இரண்டு வயது முதல், மையங்களில் குழந்தைகள் உள்ளனர்.
சில மையங்களில், பெற்றோர் அவ்வப்போது வந்து குழந்தைகளை பார்த்துச்செல்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான மையங்களில் காலையில் விடப்படும் குழந்தைகள், மதியம் உணவு முடிந்த பின்னும் நீண்ட நேரத்துக்கு பின் தான், பெற்றோர் அவர்களை அழைத்துச்செல்கின்றனர்.
அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கான தனி அறை மற்றும் சமையலறை என கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால், மையத்தைச்சுற்றி சுற்றுச்சுவர் இல்லை.
இதனால், மையம் பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
ஒரு சில மையங்களில், குழந்தைகள் அடிக்கடி வெளியில் ஓடுவதும், விளையாடுவதுமாக உள்ளனர். மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால், மையங்களின் முன் வாகனங்களை நிறுத்துவது, குப்பைக்கழிவுகளை கொட்டுவதும் நடக்கிறது.
வாளவாடி மையத்தின் அருகில், வாளவாடி குளம் பராமரிப்பில்லாமல் உள்ளது. மையத்தின் பின்புறமும், குளத்தையொட்டி புதர்ச்செடிகள் வளர்ந்துள்ளன. திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் மாறி, அசுத்தமாகிறது.
இதனால், மையத்தில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சூழலாகவும் மாறியுள்ளது. மையத்தில் குழந்தைகள் கழிப்பறைக்கு செல்ல வெளியே வரவேண்டும்.
சுற்றுச்சுவர் இல்லாமல், தெருநாய்கள் மையத்துக்கு வெளியே சுற்றிதிரிவதால், குழந்தைகள் வெளியில் செல்லவும் அச்சப்படவேண்டியுள்ளது. மையத்தை சுற்றிலும் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்புக்கும், நோய்த்தொற்று வராமல் தடுக்கவும், மையத்தை சுற்றிலும் துாய்மைப்பணிகள் மேற்கொள்வதோடு, நிரந்தர தீர்வாக சுற்றுசுவர் அமைக்க வேண்டும்.
சமூக நலத்துறை அதிகாரிகள், அங்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.