கட்டட தொழிலாளர் சங்க மாநாடு; தீர்மானங்கள் நிறைவேற்றம்
கட்டட தொழிலாளர் சங்க மாநாடு; தீர்மானங்கள் நிறைவேற்றம்
UPDATED : ஜூன் 02, 2026 04:21 PM
ADDED : ஜூன் 02, 2026 04:10 PM
உடுமலை: கட்டுமான பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சி.ஐ.டி.யு., கட்டட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் உடுமலை தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டுக்கு சங்கத்தின் தாலுகா தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் பாலு வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
கட்டட கட்டுமான சங்கத்தின் மாநிலச்செயலாளர் குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் பேசினர்.
கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், தற்போது கட்டுமான பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த உயர்வை மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய, பணப்பலன்களை முழுமையாக உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
இயற்கை மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகையை, ரூ. ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
