/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளியில் காலாவதி மருந்து எரிப்பு; விதிமீறலால் மக்கள் அவதி
/
திறந்தவெளியில் காலாவதி மருந்து எரிப்பு; விதிமீறலால் மக்கள் அவதி
திறந்தவெளியில் காலாவதி மருந்து எரிப்பு; விதிமீறலால் மக்கள் அவதி
திறந்தவெளியில் காலாவதி மருந்து எரிப்பு; விதிமீறலால் மக்கள் அவதி
ADDED : செப் 08, 2025 10:36 PM

உடுமலை; நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் இருந்து, காலாவாதியான மாத்திரைகளை திறந்தவெளியில் எரிப்பதால், அருகிலுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கின்றனர். இதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகரம் தில்லை நகரில், சுகாதாரத்துறையின் நகர்ப்புற நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு செயல்பட்டு வந்த மையத்தில், நாள்தோறும், மக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது. அத்தியவாசிய மருந்து பொருட்களும் இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மையத்தில் இருந்து காலாவாதியான மாத்திரைகளையும், வீணான மருந்து அட்டை பெட்டிகளையும், காலி டானிக் பாட்டில்களையும் திறந்தவெளியில் வீசி, அவற்றை தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், மருந்து கலந்த நெடியும் வீசுவதால், அருகிலுள்ள குடியிருப்பு மக்கள் பாதிக்கின்றனர். இது குறித்து நேரடியாக புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவாதியான மருந்துகளை அப்புறப்படுத்த, பல்வேறு விதிமுறைகள் சுகாதாரத்துறையால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அத்துறை சார்ந்த நல வாழ்வு மையத்தினரே விதிகளை மீறி, திறந்தவெளியில் மருந்துகளை கொட்டி, தீ வைப்பது எரிப்பது மக்களை வேதனையடைய செய்துள்ளது. பாதிப்புகள் ஏற்படும் முன், நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையினரும் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.