/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலையில் பஸ்கள் நின்று செல்ல உத்தரவு
/
சிவன்மலையில் பஸ்கள் நின்று செல்ல உத்தரவு
ADDED : நவ 01, 2025 11:24 PM
திருப்பூர்: 'திருப்பூர் - திருச்சி வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும், சிவன்மலையில் நின்று செல்ல வேண்டும்,' என, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவில், திருப்பூர் - திருச்சி செல்லும் சாலையில், காங்கயம் அருகே உள்ளது. இக்கோவில் பஸ் ஸ்டாப்பில், டவுன்பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. இந்நிலையில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசு போக்குவரத்து கழகம் (கோவை) திருப்பூர் மண்டல பொதுமேலாளர் தரப்பில் இருந்து, கோவை, ஈரோடு மற்றும் ஊட்டி உள்ளிட்ட அனைத்து கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து புறநகர பஸ்கள், திருப்பூர் - திருச்சி வழியில் பயணிக்கும் பஸ்கள், சிவன்மலை பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். புகாருக்கு இடம் அளிக்கா வண்ணம் அனைத்து புறநகர் பஸ்களும் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல டிரைவர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக குறிப்பிட்டு புகார் வரும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட டிரைவர், நடத்துனர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

