/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தட்கலில்' மின் இணைப்பு விண்ணப்பிக்க அழைப்பு
/
'தட்கலில்' மின் இணைப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 17, 2025 06:51 AM
திருப்பூர்: 'தட்கல்' திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற, உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என, மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள அறிக்கை:
'தட்கல்' திட்டத்தில், 2025-26ம் ஆண்டு விவசாய மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பங்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும், 'தட்கல்' 2025-26ல் இணைப்பு பெற தகுதியானவை.
சம்மத கடிதம், வருவாய் ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர் பெயரில், 'டிடி' எடுத்து, விண்ணப்பிக்கலாம். ஐந்து எச்.பி., வரையிலான இணைப்புக்கு, 2.50 லட்சம் ரூபாய்; ஐந்து முதல், 7.5 எச்.பி., வரையில், 2.75 லட்சம் ரூபாய்; 7.5 முதல், 10 எச்.பி., வரை, மூன்று லட்சம்; 10 முதல், 15 எச்.பி., வரையில், 4 லட்சம் ரூபாய்க்கான 'டிடி' எடுத்து வழங்க வேண்டும்.
விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில், பெயர் மாற்றம், க.ச., எண் மாற்றம் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி, பெயர் மாற்றம் மற்றும் க.ச., எண் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின்னரே, 'தட்கல்' மின் இணைப்பு வேண்டி, 'டிடி' எடுக்க வேண்டும். விண்ணப்பித்து, 'டிடி' செலுத்திய பின், பெயர் மாற்றம், க.ச., எண் மாற்றம் இருந்தால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. கூடுதல் விவரங்களுக்கு, அருகே உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

