/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
/
விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
ADDED : ஜூலை 15, 2025 11:10 PM
திருப்பூர்; சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிய, சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்று, சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு, விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், முதல்வர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த 2 ஆண், 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்சியாளர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, விளையாட்டு விருது பரிசாக, தலா ஒரு லட்சம் ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.
அவ்வகையில், 2024 - 25 மற்றும் 2025 - 26 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக வசிப்பவராகவும், தமிழக அணி சார்பில் பங்கேற்று, இந்தியாவுக்காக விளையாடியவராக இருக்க வேண்டும்.
இந்திய அணியில் விளையாடிய, பணி நிமித்தமாக தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்துவரும், முப்படை, ரயில்வே, போலீஸ், தபால், தொலை தொடர்பு துறைகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம். www.sdat.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல், முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை' என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை, வரும் ஆக. 11ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டியது அவசியம். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தகுதியான விளையாட்டு வீரர்கள், தவறாமல் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.