/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து விதிமீறல்கள் தொடரலாமா?
/
போக்குவரத்து விதிமீறல்கள் தொடரலாமா?
ADDED : மே 01, 2025 04:20 AM
திருப்பூர் : போக்குவரத்து விதிமீறல்கள்தான் விபத்துகளுக்கு அச்சாரமாக இருக்கின்றன. நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இதைக் கண்டுகொள்ளாமல், விதிமீறுபவர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளனர்.
போக்குவரத்து போலீசாரும் பலவழிகளில் விதிமீறல்களில் ஈடுபடுவோரை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால், புதுப்புது விதங்களில் விதிமீறல்கள் அரங்கேறுகின்றன. ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு, பேசியபடியும், சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டும் வாகனங்கள் இயக்குவது அதிகரித்துள்ளது. இவ்வாறு, ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனத்தை இயக்குவதால் கவன சிதறல் ஏற்பட்டு அதனால், எதிரில் வரும் வாகனத்துடன் மோதி விபத்து ஏற்படுகிறது.
வாகனம் ஓட்டும் போது, காதுகளில் ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு பேசுவது, சினிமா பாடல்களை கேட்பதால், பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஒலி, ஆம்புலன்ஸ்களின் ஒலி ஆகியவை கேட்பதில்லை. இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வகையான விபத்துகளில் பலரும் உயிரிழப்பது, கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதைக்கருத்தில் கொண்டு இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.
தனியாக அபராதம்விதிக்க வழியில்லை
ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தனியாக அபராதம் விதிக்க முடிவதில்லை. மொபைல் பேசியபடி வாகனம் இயக்குவதற்கான அபராதமே வசூலிக்கப்படுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்வது அவசியமானது. ஆனால், அந்த தொழில்நுட்பத்தால் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில்,''ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க பிரத்யேக சட்டம் இல்லை. ஹெல்மெட்டுக்குள் ப்ளூடூத் இருப்பதால் அவர்களை கண்டறிவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. கார்களில் ப்ளூடூத், ஹெட்செட் அணிந்து கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது,'' என்றனர்.