/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூடப்பட்ட ரோட்டை இனியாவது திறக்கலாமே?
/
மூடப்பட்ட ரோட்டை இனியாவது திறக்கலாமே?
ADDED : நவ 20, 2024 12:37 AM

திருப்பூர்; தினசரி மார்க்கெட் பணிக்காக அடைக்கப்பட்ட தார் ரோட்டை, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தினசரி மார்க்கெட், சிதிலமானதால், புதிய வளாகம் அமைக்கும் பணி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கியது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், மார்க்கெட் வளாகம் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டாக, இறுதிக்கட்ட பணிகள், முடிக்கப்படாமல் நிலுவையில் தொங்கி கொண்டுள்ளது.
கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வைக்க இடம் இல்லாததால், மக்கள் பயன்பாட்டில் இருந்த மார்க்கெட் ரோடு முழுமையாக அடைக்கப்பட்டது. திருப்பூரின் பழைய நகர், டிமாண்ட் வீதி, காங்கயம் ரோடு பகுதிக்கான இணைப்பு ரோடு அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், மார்க்கெட் அருகே உள்ள, சுகாதார நிலையத்துக்கு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்பட்டது. நுாலகம் சென்று படிப்பதும் தடைபட்டது.
இருப்பினும், கட்டுமான பணி நடந்து வருவதால், பொதுமக்களும் சகித்துக் கொண்டனர். பணிகள் நிறைவடைந்துள்ளதால், உடனடியாக, புதிய தார்ரோடு அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். ரோடு பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளதால், மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழு தலையிட்டு, மீண்டும் பயன்பாட்டுக்காக ரோட்டை திறக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

