/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கலாமா?
/
மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கலாமா?
ADDED : ஜூன் 13, 2025 11:35 PM
திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் நுாறு பேர் பங்கேற்றனர். கண், காது - மூக்கு - தொண்டை, மனநலம், எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். முகாமில், மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு பரிசோதனை நடத்தி, அடையாள அட்டைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், சென்னையில் நடைபெறும் துறைசார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார்.
நேற்று மருத்துவ பரிசோதனை முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வரும் 18ம் தேதி, பாதுகாவலர்கள் வந்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு அவசியம்
கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் முகாமில், அனைத்து மருத்துவர்களும் ஒரே இடத்தில் சுலபமாக சந்தித்து, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளமுடிகிறது. பரிசோதனை முடிந்ததும், சில மணி நேரங்கள் காத்திருந்தாவது, மாலைக்குள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கையெழுத்திட்ட அடையாள அட்டை கைக்கு வந்து விடுகிறது.
தொலைதுார பயணம், உடல் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளும், வெள்ளிக்கிழமை முகாமுக்கு வந்துவிடுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விடுப்பு அல்லது அலுவல் பணிகளுக்காக வெளியூர் செல்லும் பட்சத்தில், முன்னரே அறிவித்து, குறிப்பிட்ட வாரத்தில் மட்டும் வேறு நாளில் மருத்துவ முகாம் நடத்தலாம்.
இதன்மூலம், பரிசோதனைக்கு ஒருநாள், அட்டை வாங்க மற்றொரு நாள் என, மாற்றுத்திறனாளிகளுக்கும், பாதுகாவலர்களுக்கு வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.