/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெற்பயிர்கள் அழுகின இழப்பீடு கிடைக்குமா?
/
நெற்பயிர்கள் அழுகின இழப்பீடு கிடைக்குமா?
ADDED : டிச 27, 2024 11:39 PM
திருப்பூர், ; ''தாராபுரம் தாலுகா பகுதியில் ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் அழுகின. இதற்கான காரணத்தைக் கண்டறிய விவசாயிகள் தாமதப்படுத்துகின்றனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்'' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில், அதிக அளவு நெல் பயிரிடப்படுகிறது. கடந்த சில மாதங்கள் முன், நெல் பயிரிட்டு, களைக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது; அடுத்த சில நாட்களில் இருந்து, நெற்பயிர்கள் அழுக துவங்கிவிட்டன.
இப்பிரச்னை தொடர்பாக கடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர். அதன்படி, அடுத்தடுத்து வேளாண் அதிகாரிகள் கள ஆய்வு நடத்தினர். துவக்கத்தில், 'களைக்கொல்லி மருந்து சரியில்லை' என்று கூறிவந்தவர்கள், தற்போது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறுவதாக நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதி வீரப்பன் பேசியதாவது:தாராபுரம், மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில், நெல் உற்பத்தி அதிகம் நடக்கிறது. உணவுப்பொருள் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கிறோம். மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா எல்லையில், 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அழுகி வீணானது.
களைக்கொல்லி மருந்து அடித்த பிறகு, நெற்பயிர் அழுகியது; தற்போது, 50 சதவீத நெல் அழுகிவிட்டது; 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், மறுநடவு செய்ய விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு, 25 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்து, நெல் சாகுபடி செய்திருந்தனர். தரமில்லாத களைக்கொல்லி மருந்து பயன்படுத்திய விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாதிப்புக்கான காரணத்தை கண்டறிய தாமதம் ஏற்படுத்தி வருகின்றனர்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.