/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆவண எழுத்தர்கள் உரிமம் ரத்து; சட்டவிரோதம்: ஐகோர்ட் அதிரடி
/
ஆவண எழுத்தர்கள் உரிமம் ரத்து; சட்டவிரோதம்: ஐகோர்ட் அதிரடி
ஆவண எழுத்தர்கள் உரிமம் ரத்து; சட்டவிரோதம்: ஐகோர்ட் அதிரடி
ஆவண எழுத்தர்கள் உரிமம் ரத்து; சட்டவிரோதம்: ஐகோர்ட் அதிரடி
ADDED : ஜூலை 20, 2025 11:36 PM
பல்லடம்,; திருப்பூர் மாவட்டம், பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்சம் தலை விரித்தாடுவதாக கூறி, 2023 ஜூன், பத்திர ஆவண எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, அப்போதைய சார் பதிவாளர்கள் பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
போராட்டத்தை ஒருங்கிணைத்த ஆவண எழுத்தர்கள் ஜெகதீசன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உரிமங்களை ரத்து செய்து அப்போதைய மாவட்ட பதிவாளர் லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெகதீசன் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில், ஜூலை, 15ல், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பதிவுத்துறை அதிகாரிகள் சிலரது நடத்தைக்கு எதிராக, ஆவண எழுத்தர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒருங்கிணைத்ததன் விளைவாகவே குழு நிர்வாகிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது தெரிய வருகிறது. இந்த போராட்டம் அவர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கான ஒரு காரணமாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தொழில்முறை தவறான நடத்தை அல்லது ஆவண எழுத்தர்கள் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் மட்டுமே உரிமம் ரத்து செய்யப்படலாம் என விதிகள் கூறுகின்றன. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரப்பட்டு, ஆர்ப்பாட்டமும் நடைபெறாத நிலையில், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஒருங்கிணைப்பாளர்கள் மீதான நடவடிக்கைகள் சட்ட விரோதமானது; ரத்து செய்யப்படுவதற்கு உட்பட்டது. எனவே, இவர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஒருங்கிணைத்ததன் காரணமாக, எங்களது ஆவண உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஐகோர்ட் மூலம் எங்களுக்கு சரியான நியாயம் கிடைத்துள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவு புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது' என்றனர்.