/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாரடைப்புக்கு அடுத்த அபாயம், புற்றுநோய்'
/
'மாரடைப்புக்கு அடுத்த அபாயம், புற்றுநோய்'
ADDED : பிப் 05, 2025 12:30 AM
திருப்பூர்; உலக புற்றுநோய் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலகளவில் ஆண்டுக்கு, ஒரு கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். உலகளவில் உயிரிழக்கும் ஒவ்வொரு, 6 பேரில், ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இந்நோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததே, உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என, உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் புற்றுநோய் அதிகம். திருப்பூரில், மாநில அரசின் ஊக்குவிப்புடன், 'நமக்கு நாமே' திட்டத்தில் ரோட்டரி மற்றும் பொது நல அறக்கட்டளை இணைந்து, அதிநவீன சிகிச்சை வழங்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையத்தை நிறுவி வருகின்றன.
ரோட்டரி அறக்கட் டளை தலைவர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது:
மக்கள் இறப்புக்கான காரணங்களில் மாரடைப்புக்கு அடுத்தபடியாக, புற்றுநோய் இருக்கிறது. கடந்த, 2018ல் புற்றுநோய்க்கு, 96 லட்சம் பேர் இறந்துள்ளனர். 2022ல், இது, 2 கோடி பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில், 97 லட்சம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். 5 ஆண்டுகளில், 5.35 கோடி பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதில், 9 ஆண்களில் ஒரு ஆண்; 12 பெண்களில், ஒரு பெண் என்ற விகிதத்தில், பாதிப்பு இருந்துள்ளது. 2050ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3.50 கோடியாக இருக்கும்; இது, 2022ம் ஆண்டில் இருந்த பாதிப்பை விட, 77 சதவீதம் அதிகம் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகையிலை பழக்கம், மது, அதீத கொழுப்பு கொண்ட உணவுகளை உட் கொள்வது புற்றுநோய்க்கு காரணமாகிவிடுகிறது. உலகில் கண்டறியப்பட்ட நோய்களில் மிகவும் கொடியது என்ற பட்டியலில், புற்றுநோயும் ஒன்று. இருப்பினும், பல்வேறு வகையான புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அளவிற்கு மருத்துவத்துறை வளர்ந்திருக்கிறது. இதனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரை இறப்பில் இருந்து காக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.