வேட்பாளர் செலவுக்கணக்கு 2ம் கட்ட சரிபார்ப்பு பணி
வேட்பாளர் செலவுக்கணக்கு 2ம் கட்ட சரிபார்ப்பு பணி
ADDED : ஏப் 17, 2026 04:32 AM

ச ட்டசபைத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைச் சரிபார்க்கும் இரண்டாம் கட்டப் பணி நேற்று நடந்தது. ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதி உண்டு.
மனுத் தாக்கலின் போது கட்டும் 'டெபாசிட்' தொகை முதல் பிரசாரத்தின் கடைசி நாள் வரை செய்யப்படும் அனைத்துச் செலவுகளும் இதில் அடங்கும்.
பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்துச் செலவுகளும் கண்டிப்பாக வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு செலவிற்கும் உரிய பில்கள் மற்றும் அதற்கென வழங்கப்பட்ட பிரத்யேகப் பதிவேட்டில் விவரங்களைத் துல்லியமாகப் பராமரிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் கணக்குகளைச் சரிபார்க்க, தேர்தல் ஆணையத்தின் சார்பில் 'செலவினக் கண்காணிப்பு குழு' அமைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்படும் தினசரி கணக்குகள்; கண்காணிப்பு குழுவினர் ரகசியமாகச் சேகரிக்கும் 'நிழல் கண்காணிப்பு' விவரங்கள் என இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய அறிவுறுத்தப்படுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கான இரண்டாம் கட்ட சரிபார்ப்புப் பணி நேற்று நடந்தது. கண்காணிப்பு குழு அலுவலர்கள் வாசுகி, பரத் ஆகியோர் முன்னிலையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தந்த வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள், தங்கள் செலவு கணக்கு பதிவேடுகளைக் கொண்டு வந்து அதிகாரிகளின் கணக்குகளுடன் ஒப்பு நோக்கிச் சரிபார்த்தனர்.
