UPDATED : ஆக 29, 2026 11:00 PM
ADDED : ஆக 29, 2026 08:22 PM
திருப்பூர்:மது பாட்டில் கேட்டு ஏற்பட்ட தகராறில், சமையல் மாஸ்டர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற அண்ணன், தம்பி உட்பட 3 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, டீச்சர்ஸ் காலனி அருகே டாஸ்மாக் பார் சமையல் மாஸ்டர் மதி, 33, கடந்த 28-ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு அறை அருகே நின்றிருந்தார். அப்போது கார் மூலம் அவர் மீது மோதியதில் காயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, பாரில் மது பாட்டில் கேட்டபோது மதி இல்லை என கூறியதால் அவருக்கும் ஷியாம், 33 என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கார் ஏற்றி கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த ஷியாம், அவரது அண்ணன் பனியன் வர்த்தகர் மோகித், 35, நண்பர் ராபின்ஸ்குமார், 22, ஆகியோரை போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
