/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு நோக்கி சரக்குமுனைய விவகாரம்
/
தீர்வு நோக்கி சரக்குமுனைய விவகாரம்
ADDED : ஏப் 07, 2025 05:54 AM

திருப்பூர்; துாத்துக்குடி சரக்கு முனையங்களில், அதிக மாமூல் வசூலிப்பது தொடர்பான பிரச்னைக்கு, இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து, 30ம் தேதிக்குள் சுமூக தீர்வு காணப்படுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது.
திருப்பூரில் இருந்து துாத்துக்குடிக்கு, பின்னலாடைகளை ஏற்றிச்செல்லும் லாரிகள், சரக்கு முனையங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு, சரக்கை கையாள, அதிக அளவு 'மாமூல்' கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 'மாமூல்' கட்டாயமாக மாறியதால், லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக, குழப்பம் நிலவுகிறது. இப்பிரச்னை தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திடம் லாரி உரிமையாளர்கள் முறையிட்டனர். ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள், சரக்கு முனைய உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வை உருவாக்கலாம் என உறுதியளித்தனர்.
இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில், ஏற்றுமதி கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் துாத்துக்குடி சரக்கு முனைய சங்க நிர்வாகிகள் பங்கேற்ற, முத்தரப்பு பேச்சுவார்த்தை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். நிர்வாகக்குழு உறுப்பினர் ஆனந்த், துாத்துக்குடி சி.எப்.எஸ்., சங்க தலைவர் செலஸ்டின் வில்லவராயர், செயலாளர் ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள், துாத்துக்குடி சுங்க தரகர்கள் சங்க செயலாளர் ராமசாமி,தக் ஷின் பாரத் கேட்வே டெர்மினல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
இருதரப்பினரின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
திருப்பூர் ஏற்றுமதி சரக்குகளை கையாளும் சங்கங்கள், தங்களின் எதிர்பார்ப்புகளை, எழுத்துப்பூர்வமாக, ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு அளிப்பது என்றும், அவற்றை துாத்துக்குடி சங்கங்களிடம் அனுப்பி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, ஏப்., 30ம் தேதிக்குள் சுமூக தீர்வு கண்டு, சரக்கு கையாள்வது தொடர்பான நெறிமுறைகளை, அனைவரின் ஒத்துழைப்புடன் உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
திருப்பூரின் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றி வரும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் துாத்துக்குடி சரக்கு முனையங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தொடர் சங்கிலி அமைப்பின் சரியான இயங்குதல் இருந்தால் மட்டுமே, ஏற்றுமதியாளர்களின் சரக்குகள், குறித்த நேரத்தில் வர்த்தகர்களை சென்றடையும். துாத்துக்குடி சரக்குமுனையத்தில் ஏற்படும் குழப்பத்துக்கு சரியான தீர்வு காண்பதற்காகவே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது; அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- திருக்குமரன், பொதுச்செயலாளர்,ஏற்றுமதியாளர் சங்கம்.
கடந்த சில மாதங்களாக, சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் துாத்துக்குடி சரக்கு முனையங்கள் என இருதரப்பிலும் பிரச்னைகள் இருந்து வருகிறது. வரும் காலங்களில், சுமூகமான சூழலில் பணிகள் நடக்க, சரியான வழியை கண்டறிய வேண்டும்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மத்தியஸ்தராக இருந்து, இப்பிரச்னைக்கு தீர்வு காணும்.
- குமார் துரைசாமி, இணைச்செயலாளர்,ஏற்றுமதியாளர் சங்கம்.

