/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர பேக்கரிக்குள் புகுந்த சரக்கு வேன் வேகத்தடையால் விபத்து; மக்கள் மறியல்
/
சாலையோர பேக்கரிக்குள் புகுந்த சரக்கு வேன் வேகத்தடையால் விபத்து; மக்கள் மறியல்
சாலையோர பேக்கரிக்குள் புகுந்த சரக்கு வேன் வேகத்தடையால் விபத்து; மக்கள் மறியல்
சாலையோர பேக்கரிக்குள் புகுந்த சரக்கு வேன் வேகத்தடையால் விபத்து; மக்கள் மறியல்
ADDED : ஆக 31, 2025 06:56 AM

பல்லடம்: பல்லடம் அருகே வேகத்தடையால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், பேக்கரிக்குள் புகுந்ததால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் - சுல்தான்பேட்டை இடையே நெடுஞ்சாலையில், 2.5 கி.மீ., இடைவெளியில், 21 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் ஆகியோரை சந்தித்து, பொதுமக்கள் ஏற்கனவே மனு அளித்துள்ளனர். இருப்பினும் வேகத்தடை அகற்றப்படவில்லை.
நேற்று மதியம், காமநாயக்கன்பாளையத்தில் இருந்து, சுல்தான்பேட்டை நோக்கி வந்த சரக்கு வேன், வேகத்தடையில் ஏறும்போது கட்டுப்பாட்டை இழந்து, சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு ரோட்டோர பேக்கரிக்குள் புகுந்தது.
இதில், அங்கிருந்த கார், அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் சுரேஷ், 32, கடைக்குள் நின்றிருந்த பெண் லட்சுமி, 37, ஆகியோர் படுகாய மடைந்தனர்.
விபத்தால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், 'நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம்' என, மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'நான்கு மாத மாக எம்.பி., - எம்.எல்.ஏ., - அமைச்சர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என, பலரையும் சந்தித்து வேகத்தடைகளை அகற்ற மனு கொடுத்துள்ளோம். விபத்துகள் நடந்தும் அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை.
'வேகத்தடைகளை அகற்றுவது குறித்து கேட்டால், சட்டசபையில் பேச வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். எங்கும் இல்லாத வேகத்தடைகளை, இங்கு எதற்காக அமைக்க வேண்டும்?' என, கேள்வி எழுப்பினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வேகத்தடைகள் இடையே ஜல்லிக்கற்கள் கொண்டு மூடுவதாக உறுதி அளித்தனர். முதல் கட்டமாக, ஒரு வேகத்தடை மட்டும் பொதுமக்கள் முன்னிலையில் மூடப்பட்டது.

