/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி பெண் மருத்துவர் மீது வழக்கு
/
போலி பெண் மருத்துவர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2025 12:15 AM

பொங்கலுார்: அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை வழங்கி வந்தவரின் குடியிருப்பு கட்டட வளாகத்தில், மருந்து, மாத்திரை உள்ளிட்டவை அவசர கதியில் எரியூட்டப்பட்டிருப்பது, மருத்துவ அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது.
பல்லடம், தாராபுரம் சாலை அருகேயுள்ள வே.கள்ளிபாளையத்தில் மருத்துவ படிப்பு படித்திராத ஒரு பெண், மருத்துவம் பார்ப்பதாக, மருத்துவத் துறையினருக்கு தகவல் கிடைக்க, மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனர் மீரா தலைமையில், பொங்கலுார் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவடிவேல், அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, கள்ளிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், டாக்டர் உஷா மேனன் என்ற பெயரில் மருந்துகள் பரிந்துரைக்கும் சீட்டு தென்பட்டது.
ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் உபகரணம், நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள கட்டில் உள்ளிட்டவை இருந்தன. உஷாமேனன், அலோபதி மருத்துவம் படிக்காமல், மருத்துவம் பார்த்து வருவது தெரியவந்தது.
கட்டட வளாகத்தை மருத்துவ அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்ட போது, வீட்டின் வளாகத்தில் ஊசி மருந்து, மாத்திரை, குளுகோஸ் பாட்டில் உள்ளிட்டவை அவசர அவசரமாக எரியூட்டப்பட்டு, சாம்பலாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது; மருத்துவ கழிவு மற்றும் மருந்து மாத்திரைகளை இவ்வாறு, திறந்த வெளியில் கொட்டுவதோ, எரியூட்டுவதோ சட்டப்படி தவறு என்ற நிலையில், மருத்துவஅதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உஷா மேனன் என்பவர் அங்கு இல்லை. கட்டட வளாகத்தில் இருந்த ஒரு நபரிடம் விசாரிக்கும் போது, இந்த கட்டடத்தை மாதம், 4,000 ரூபாய் வாடகைக்கு விட்டிருப்பதாக கூறினார். எரியூட்டப்பட்ட மருந்து, மாத்திரைகள் குறித்து, அவரிடம் முறையிட்ட போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, உஷா மேனன் என்பவர் அலோபதி மருத்துவம் பார்ப்பது தெரிய வர, அந்த கட்ட டத்திற்கு 'சீல்' வைத்தனர்.
விசாரணையில், உஷாமேனன் போலி மருத்துவர் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மீது காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

