/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பயத்தை துச்சமென துாக்கி எறியுங்கள்'
/
'பயத்தை துச்சமென துாக்கி எறியுங்கள்'
ADDED : செப் 12, 2025 12:34 AM

திருப்பூர்; பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் கவிதை வாசித்தனர்.
கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ''மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. மேடையில் வந்து நிற்க வேண்டும், பேச வேண்டும். நீங்கள் மேடை ஏறாமல் ஒதுங்கிச்செல்வதால் தான் தகுதியற்றவர்களும், தன்னடக்கமில்லாதவர்களும் மேடை ஏறுகின்றனர். நீங்கள் எல்லா இடத்திலும் நம்பர்: 1 ஆக வர வேண்டும்,'' என்றார்.
'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் இணை பேராசிரியர் ராமலிங்கம் பேசியதாவது:
'அஞ்சி அஞ்சி சாவார்' என்று பாரதி பாடினான். மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின்மீது பயம் இருக்கும். உயிரின் மீது, உடமையின் மீது பயம் இருக்கும். மாணவர்களுக்கு ஆசிரியரின் மீது பயம் இருக்கும். அது ஒரு காலம். இப்போது ஆசிரியருக்கு மாணவரைக் கண்டால் பயம் வருகிறது. வகுப்பறைக்கு கத்தி கொண்டு செல்லும் மாணவர்களையும், சக மாணவர்களை அடித்துக் கொல்லும் சூழலும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படி அனைவரும் பயப்படும் காலகட்டத்தில் எவருக்கும் அஞ்சாதவராக விளங்கியவர் பாரதியார். மரணம் தானே நிகழும், என்றோ வரப்போவது இன்றே வரட்டும் என்று அஞ்சா நெஞ்சாக விளங்கியவர் பாரதியார்.
ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் உபத்திரம் செய்து விடக்கூடாது. துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றாலும் கடுஞ்சொல் சொல்லிவிடக்கூடாது. பயந்தவருக்கு நாம் சொல்லும் ஆறுதல், அதிலிருக்கும் நம்பிக்கை, அவரை குணப்படுத்திவிடும். பயப்படும்போது அறிவு வேலை செய்ய வேண்டும். துணிச்சலும் நம்பிக்கையும் இருந்தால் எதிலிருந்தும் தப்பிக்க முடியும்.
ரயிலில் இருந்து துாக்கிவீசப்பட்டு காலை இழந்தபோதும், ஒற்றைக் காலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த அருணிமா சின்ஹா, நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவர் பயந்திருந்தால் எப்போதோ தோல்வியடைந்திருப்பார். மாணவர்களே நீங்கள், பயத்தை துச்சமென மதித்து துாக்கி எறியுங்கள். எதையும் துணிச்சலாக செய்யுங்கள். வெற்றி கிடைத்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் நித்திஷ்வரன், புவனேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவர் வெண்மணி நன்றி கூறினார்.