/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை; சிறப்பு முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு
/
மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை; சிறப்பு முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு
மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை; சிறப்பு முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு
மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை; சிறப்பு முகாம்கள் நடத்த எதிர்பார்ப்பு
ADDED : நவ 01, 2024 10:18 PM
உடுமலை; சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதால், உடுமலை பகுதி கிராமங்களில், கால்நடைத்துறை சார்பில், சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில், கடந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 65 ஆயிரத்துக்கும் அதிகமான பசு மாடுகள், 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு, கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் அளித்து வருகிறது.
இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்த்தாக்குதல் பரவி, உயிரிழப்பு, பால் உற்பத்தி குறைவு உட்பட பிரச்னைகள் ஏற்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவமழை காலத்தில், மாட்டம்மை நோய் தாக்கி, ஆயிரக்கணக்கான மாடுகள் பாதிக்கப்பட்டன; வெள்ளாடுகளுக்கும் நோய்த்தாக்குதல் பரவியது.
இப்பிரச்னைகளுக்கு முன்னெச்சரிக்கையாக, கால்நடைத்துறை சார்பில், முன்பு, ஊராட்சி அளவிலான, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.
அம்முகாமில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு, கால்நடை வளர்ப்போருக்கு ஏற்படுத்தப்பட்டு வந்தது. வாரம் ஒரு ஊராட்சி என்ற அளவில், இந்த முகாம்கள் நடத்த, கால்நடைத்துறையில், நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த முகாம்கள் முறையாக நடத்தப்படுவதில்லை. இதனால், அனைத்து கிராமங்களிலும், கால்நடைகளுக்கான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்கள் தரம் உயர்த்தப்பட்டாலும், கால்நடை வளர்ப்போருக்கு, போதிய விழிப்புணர்வு இல்லாததால், அங்கு கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை செய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறியவும் ஆர்வம் காட்டுவதில்லை.
இது கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவ முக்கிய காரணமாகிறது. கிராம அளவில், முகாம்கள் நடத்தும் போது, அங்கு வளர்க்கப்படும் அனைத்து வகையான கால்நடைகளும், சிகிச்சை பெறுவது எளிதாகிறது; சீசன்களில் பரவும் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், குறித்து கால்நடைத்துறையினரும், எளிதாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
எனவே, கால்நடைத்துறை சார்பில், மீண்டும் கிராம வாரியாக சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், சிறப்பு கால்நடை மருத்துவர் குழுவினர் வாயிலாக, சிகிச்சையளிப்பதால், கால்நடைகளுக்கு பரவும் தொற்று நோய்களை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
இது குறித்து, கால்நடைத்துறையினர் முறையான அறிவிப்பு வெளியிட, கால்நடை வளர்ப்போர் எதிர்பார்த்துள்ளனர்.