ADDED : டிச 20, 2024 10:51 PM
உடுமலை; உடுமலை தளி பேரூராட்சியில், மயானம் மேம்பாட்டு பணி நடந்து வரும் நிலையில், உரிய அளவீடு செய்து கட்ட வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: தளி பேரூராட்சி, உடுமலை கால்வாய் பகுதியில், நீர் நிலை புறம்போக்கு, வருவாய்த்துறை மற்றும் ரோடு ஆகியவற்றுக்கான, 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. தளி பேரூராட்சி சார்பில், மயான மேம்பாடு என்ற பெயரில், பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முறையாக அளவீடு செய்து, மயானத்திற்குரிய இடத்தை அளவீடு செய்து, அங்கு பணி மேற்கொள்ள வேண்டும், என ஏற்கனவே மனு அளித்து, கோட்டாட்சியர், அளவீடு செய்யும் வரை பணி மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அதனையும் மீறி பணி நடப்பதால், இரு தரப்பு பிரச்னையாக மாறியுள்ளது. முறையாக அளவீடு செய்து, அதற்கு பின் பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கூறினர்.
இதற்கு பதில் அளித்த கோட்டாட்சியர், 'தளி பேரூராட்சி செயல் அலுவலருக்கு ஏற்கெனவே உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பணி மேற்கொண்டால், நீர் நிலை புறம்போக்காக இருந்தால், கட்டடம் இடிக்கப்படுவதோடு, செலவழித்த தொகைக்கும் நிர்வாகமே பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணி நிறுத்தப்பட்டுள்ளது, ஒரு சில நாட்களில் அளவீடு செய்து, துறைகளுக்கான நிலம் அடையாளம் காணப்படும்,' என்றார்.
