/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய தென்னை வளர்ச்சி வாரிய ஸ்தாபன தின விழா
/
மத்திய தென்னை வளர்ச்சி வாரிய ஸ்தாபன தின விழா
ADDED : ஜன 16, 2025 05:53 AM

உடுமலை : மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின், 45வது ஸ்தாபன தின விழா, உடுமலை அருகேயுள்ள தளி திருமூர்த்தி நகரிலுள்ள தென்னை மகத்துவ மையத்தில் நடந்தது.
மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் சார்பில், ஒருங்கிணைந்த தென்னை சாகுபடி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் வளர்ச்சிக்காக தென்னை வளர்ச்சி வாரியம், 1981 ஜன.,12 துவக்கப்பட்டது.
இதன் ஸ்தாபன துவக்க விழா, உடுமலை அருகேயுள்ள தளி திருமூர்த்தி நகரிலுள்ள, மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை மகத்துவ மையத்தில் நடந்தது. உதவி இயக்குனர் ரகோத்துமன் தலைமை வகித்து, தென்னை மகத்துவ மையத்தின் செயல்பாடுகள், வாரியத்தின் கீழ் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், தென்னை மதிப்பு கூட்டிய பொருட்கள் உற்பத்தி குறித்து விளக்கினார்.
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் துக்கையண்ணன், ஒருங்கிணைந்த தென்னை பயிர் நிர்வாகம் குறித்து விளக்கினார்.
இதில், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள், தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், உப பொருட்கள், உயிர் உரங்கள், விளக்கு பொரி, இனக்கவர்ச்சி பொறி உள்ளிட்ட உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த கண்காட்சியும், செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.
தென்னை மகத்துவ மைய கள அலுவலர்கள் பிரதிமா, பரமசிவம் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள், தொழில் முனைவோர் பங்கேற்றனர்.