/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு; குடிநீர் வினியோகத்தில் அதிருப்தி
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு; குடிநீர் வினியோகத்தில் அதிருப்தி
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு; குடிநீர் வினியோகத்தில் அதிருப்தி
'ஜல் ஜீவன்' திட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு; குடிநீர் வினியோகத்தில் அதிருப்தி
ADDED : மார் 14, 2024 12:04 AM
திருப்பூர் : திருப்பூரில், ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், குடிநீர் வினியோகத்தில் முழு திருப்தியடையவில்லை.
கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி, நீர் வினியோகிக்கும் வகையில், மத்திய அரசு, ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நாடு முழுக்க இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள, 8 ஊராட்சிகள்; அவிநாசி ஒன்றியத்தில் உள்ள, 8 ஊராட்சிகள் கள ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஊராட்சிகளில், இரு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கள ஆய்வில் ஈடுபட்டனர். நேற்று, அவிநாசி ஒன்றியத்தில், கணியாம்பூண்டி ஊராட்சியில் கள ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், குப்பாண்டம்பாளையம், நடுவச்சேரி, அய்யம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வின் போது, ஊராட்சியில் மொத்தமுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு; ஜல் ஜீவன் திட்டத்தில் எத்தனை வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது; தினசரி, எவ்வளவு குடிநீர் வினியோகிக்கப்படுகிது அனைத்து வீடுகளிலும், தனிநபர் கழிப்பறை உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தனர். ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள், பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அதிகாரிகளும் ஆஜராகினர்.
ஊராட்சிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தினசரி வினியோகிக்கப்பட வேண்டிய குடிநீரின் அளவை கேட்டறிந்த அதிகாரிகள், 'அதைவிட மிகக்குறைந்த அளவில் தான், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது' என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதை கேட்டு, அதிருப்தியடைந்தனர். இதற்கான காரணம் குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். போதிய மழையில்லாததால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு உள்ளிட்ட நீராதாரங்களில் தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது என்ற காரணத்தை அதிகாரிகள் முன்வைத்தனர்; இதில், மத்திய குழுவினர் முழு திருப்தியடையவில்லை.
முடிவில், 'ஜல் ஜீவன் திட்டத்தில், தேவைக்கேற்ப குடிநீர் இணைப்பு வழங்கி, நீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தி சென்றனர்.

