/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னையில் உதவ மத்திய அரசு தயார்
/
குப்பை பிரச்னையில் உதவ மத்திய அரசு தயார்
ADDED : நவ 12, 2025 11:41 PM
திருப்பூர்: இந்துார் மற்றும் வாரணாசியை பின்பற்றி, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் 'ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட்' திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.
இதற்கு தேவையான நிதி உதவி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ. தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவரது அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி யின் செயலற்ற நிர்வாகத்திறன் காரணமாக, மாநகர பகுதி முழுவதும் குப்பை குவிந்துள்ளது. 'டாலர் சிட்டி', 'குப்பை சிட்டி' யாக மாறிவிட்டது.
திருப்பூரில் நிலவும் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இடுவாயில், குப்பை கொட்ட முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல், கண்டிக்கத்தக்கது. முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டியதால், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.
மாநகராட்சியின் தோல்வியை மறைப்பதற்காக, தி.மு.க.,வின் மேயர், மாநகராட்சி மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இடையே தேவையற்ற மோதலை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டினால், பா.ஜ., நிர்வாகிகள், லாரிகளை மறிப்பார்கள் என, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்.
திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்னை தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனிடம் எடுத்துரைத்தோம். மத்தியபிரதேசம் மாநிலம், இந்துார் மற்றும் உ.பி., வாரணாசியில் செயல்படுத்துவதை போன்று, 'ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட்' திட்ட அறிக்கை சமர்ப்பித்தால், உரிய உதவிகள் செய்வதாக, நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், கிராமப்புற பகுதிகளை குப்பை கூடாரமாக மாற்றாமல், பா.ஜ. ஆளும் இந்துார், மற்றும் வாரணாசி மாநகராட்சிகளுக்கு நிபுணர் குழுவை உடனடியாக அனுப்பவேண்டும்.
அங்கு செயல்படுத்தும் குப்பை மேலாண்மை திட்டங்கள் அடிப்படையில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அளிக்கவேண்டும். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை வேறு செலவுகளுக்கு பயன்படுத்தாமல், முழு தொகையையும் குப்பை மேலாண்மை திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
குப்பை சேகரிக்கும் நிறுவனத்துக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தொகை, அந்நிறுவனத்தால் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றிய அளவு ஆகிய விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

