/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பேப்ரிக்' இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
/
'பேப்ரிக்' இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
ADDED : அக் 07, 2024 01:16 AM

திருப்பூர் : சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட, சாயமிடப்பட்ட 'பேப்ரிக்' துணியால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். உள்ளூரில் தயாரிக்கும் துணியை காட்டிலும், இறக்குமதி துணியின் விலை குறைவாக இருந்ததால், உற்பத்தியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது.
ஆடை உற்பத்தியாளர்களுக்கு மலிவு விலையில் துணி கிடைத்தாலும், துணி உற்பத்தியும் சாயத்தொழிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, சீனாவில் உற்பத்தியாகும் துணி, வங்கதேசம் வழியாக, நமது நாட்டுக்குள் ஊடுருவுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
கோவை வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகளிடம், திருப்பூர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) நிர்வாகிகள், துணி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, சாயமிடப்பட்ட பின்னல் துணி (பேப்ரிக்) இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சாயமிடப்பட்ட பின்னல் துணியில், கிலோ 300 ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டும் வரிச்சலுகை கிடைக்கும் என்றும், டிச., 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுாலிழையில் தயாரிக்கப்பட்ட பின்னல் துணி, சாயமிடப்பட்ட பருத்தி 'பேப்ரிக்', சிந்தடிக் பேப்ரிக் என, எட்டு வகையான துணி ரகங்களுக்கு, இத்தகைய கட்டுப்பாடு பொருந்துமெனவும், வர்த்தகத்துறை அமைச்சரகம் அறிவித்துள்ளது.
'சைமா' முன்னாள் இணை செயலாளர் தாமோதரன் கூறியதாவது:
இறக்குமதி வரி ஏய்ப்பு செய்ய, விலை அதிகமுள்ள துணியை, குறைவாக மதிப்பிட்டு இறக்குமதி செய்வதாக புகார் எழுந்திருந்தது; அதற்காகவும், இதன்மூலமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல், கிலோ 300 ரூபாய்க்கு அதிகமான துணிக்கு மட்டும் வரி விலக்கு கிடைக்கும்; விலை குறைவான துணிக்கு, இறக்குமதி வரி விதிக்கப்பட்டால், விலை மேலும் உயரும்.
திருப்பூரில் உற்பத்தியாகும் துணி ரகங்கள் விலை அதைக்காட்டிலும் குறைவாக இருக்கும். இனிமேல், உள்ளூர் துணிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். கோவையில் நடந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பான ஆலோசனையின் போது, அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம், இதுதொடர்பாக 'சைமா' கடிதம் அளித்திருந்தது. பல்வேறு சங்க நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று, தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பயன்களை பார்த்த பிறகு, நிரந்தர கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.