ADDED : பிப் 20, 2024 05:17 AM
உடுமலை: வரத்து குறைவால், கொத்தமல்லி கொள்முதல் விலை உயர்ந்தாலும், இருப்பு வைத்து விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பு சீசனில், களைச்செடிகள் பரவல் அதிகமாக இருந்ததுடன், போதிய மழை இல்லாததால், செடிகள் பாதிக்கப்பட்டன.
பூ விடும் தருணத்திலும், காய் பிடிக்கும் போதும், பருவம் தவறிய மழையால், செடியில் பூக்கள் உதிர்ந்து, மணிகளும், போதிய நிறமின்றி காணப்பட்டன.
விளைச்சல் வெகுவாக குறைந்த நிலையில், அறுவடை துவக்கத்தில், விலையும் சரிந்தது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொத்தமல்லியை இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலுள்ள, உலர்களங்களில், கொத்தமல்லியை காய வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கொத்தமல்லி விலை ஏறுமுகத்தில் உள்ளது; சீசன் துவக்கத்தில், தரத்தின் அடிப்படையில், கிலோ 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொத்தமல்லி, தற்போது, கிலோ, 40 ரூபாயை தாண்டியுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'கொத்தமல்லி சாகுபடியில், விளைச்சல் குறைந்து விட்டது; விலை உயர்ந்து வந்தாலும், இருப்பு வைத்து, சில மாதங்கள் கழித்து விற்பனை செய்ய திட்டமிட்டுளோம்,' என்றனர்.

