/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஸ், கேரம் வீரர்கள் ஜொலிக்க தேவை கட்டமைப்பு
/
செஸ், கேரம் வீரர்கள் ஜொலிக்க தேவை கட்டமைப்பு
ADDED : டிச 27, 2024 11:36 PM

திருப்பூர், ; திருப்பூரைச் சேர்ந்த வீரர்கள் செஸ், கேரம் போட்டிகளில், முத்திரை பதிக்கத் துவங்கியிருக்கின்றனர்; அவர்களுக்கான பயிற்சி கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நடந்த உலக கேரம் போட்டியில், மூன்று தங்கப்பதக்கங்களைச் சென்னையைச் சேர்ந்த காசிமா வென்று சாதனை புரிந்தார். இருவரது சாதனையும், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில், செஸ், கேரம் போட்டி மீதான ஆர்வத்தை மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், திருப்பூரில் நடந்த சீனியர் பிரிவு கேரம் போட்டியில் திருப்பூர் வீரர் கணேசன், சாம்பியன் பட்டம் தக்க வைத்தார். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிக்கும் திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வாகின்றனர்.செஸ் விளையாட்டை பொறுத்தவரை, சமீபத்தில் நடந்த இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில், திருப்பூர் மாணவர் கோகுலகிருஷ்ணன் தங்கம் வென்றுள்ளார். மாநில போட்டிக்கும் நம் மாவட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றிருக்கின்றனர்.செஸ், கேரம் போட்டியில் வீரர், வீராங்கனைகளின் திறமையை பட்டை தீட்டி, அவர்கள் பதக்கம் பெற்று வரும் அளவுக்கு தயார்படுத்த, பயிற்சி தளங்கள் போதியளவு இல்லை என்ற குறை இருக்கிறது.
நகர, கிராமப்புறங்களில் உள்ள பயன்பாடு குறைந்த அல்லது பயன்பாடு இல்லாத பூங்காக்கள், சமுதாயக்கூடம் உள்ளிட்டவற்றை இத்தகைய பயன்பாட்டுக்கு வழங்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது.
திறமையான வீரர்கள் உருவாக
உள்ளரங்க கட்டமைப்பு அவசியம்
திருப்பூரை பொறுத்தவரை, செஸ் விளையாட்டில் மாணவ, மாணவியரின் ஆர்வம் அதிகரித்து வருகிறது; போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பள்ளிகள் அளவில் உடற்கல்வி ஆசிரியர்கள் வாயிலாக இப்பயிற்சி வழங்குவது சாத்தியமில்லை; மாறாக, பிரத்யேக பயிற்சியாளர்கள் வாயிலாக தான் பயிற்சி வழங்க முடியும். ஆனால், பயிற்சிக்கான பொதுவான இடங்கள் இல்லை. கடந்த காலங்களில், மாவட்டத்தில் இருந்து, அதிகபட்சம், 200 பேர் வரை மட்டுமே போட்டிகளில் பங்கேற்பர்; தற்போது, இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சமீபத்தில் நடந்த எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிகளில் திருப்பூர் வீரர், வீராங்கனைகளின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நகர, கிராமப்புறங்களில் உள்ள பூங்கா உள்ளிட்ட பொதுவான இடங்களில் உள்ளரங்க விளையாட்டு பயிற்சிக்கான கட்டமைப்பு அமைத்துக் கொடுத்தால், திறமையான வீரர்களை உருவாக்க முடியும்.
- ராஜேந்திரன், தேசிய செஸ் பயிற்சியாளர்