/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் வருகை எதிரொலி: பளிச்சிடும் ரோடுகள்
/
முதல்வர் வருகை எதிரொலி: பளிச்சிடும் ரோடுகள்
ADDED : ஜூலை 20, 2025 01:25 AM

திருப்பூர் : முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருப்பூர் வருகை தரவுள்ளார். வரும், 22ம் தேதி திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், 23ம் தேதி உடுமலையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
வரும் 22ம் தேதி காலை சூலுார் வழியாக திருப்பூர் வரும் முதல்வர், கோவில்வழியில் மாநகராட்சி சார்பில் கட்டியுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை திறந்து வைக்கிறார். அதன் பின் வேலம்பாளையம் மருத்துவமனை வளாகத்தையும் திறந்து வைக்கிறார்.
அதன் பின், 60 அடி ரோடு பகுதியில் உள்ள குடும்ப நண்பர் வீட்டில் மதிய உணவு முடித்துவிட்டு ஓய்வெடுக்கிறார். மாலை 4:00 மணியளவில் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி ரோட்டில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களைச் சந்திக்கிறார். அதன்பின் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டிலும் ரோடு ேஷா நிகழ்ச்சியில் பொதுமக்களை முதல்வர் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் பகுதியிலிருந்து சாலை மார்க்கமாக புறப்படும் முதல்வர், உடுமலை செல்லும் வழியில் மைவாடி - நரசிங்கபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
அன்று இரவு உடுமலையில் கட்சி நிர்வாகி இல்லத்தில் தங்குகிறார். வரும் 23ம் தேதி காலை, உடுமலையில், நேதாஜி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, உடுமலையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் முதல்வர், பி.ஏ.பி., திட்ட அலுவலக வளாகத்தில், சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு, பி.ஏ.பி., திட்டத்துக்கு அடித்தளமிட்ட நான்கு பிரமுகர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார். பொள்ளாச்சியிலிருந்து கோவை செல்லும் முதல்வர் அங்கு மதிய உணவுக்குப் பின் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசி, சென்னை செல்கிறார்.
பளிச்சிடும் ரோடுகள்
தமிழக முதல்வர் திருப்பூர் வருகை தருவதால், கடந்த ஒரு வாரமாக திருப்பூர் பகுதி முழுவதும் ரோடுகள் சீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நகரின் அனைத்து பிரதான ரோடுகளிலும் கடந்த பல மாதங்களாக குண்டும் குழியுமாக இருந்த பகுதிகள் இரவோடு இரவாக சீரமைப்பு செய்யப்பட்டது. மேலும், மையத் தடுப்புகள், பாலங்கள் அனைத்தும் வெள்ளை பெயின்ட் அடித்து பளிச்சிடுகின்றன.
பிரதான ரோடுகளில் குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்து, குடிநீர் வழிந்தோடுவது தடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாலம் உள்ளிட்ட பாலங்களில் பக்கவாட்டு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
நகரில் உள்ள முக்கிய ரோடுகளில் உள்ள கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிகால்கள் சுத்தப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
கட்சியினர் ஆலோசனை
திருப்பூர் வருகை தரும் முதல்வரை வரவேற்பது குறித்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில், மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள்,சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூர் வருகை தரும் முதல்வரை சிறப்பான முறையில் வரவேற்கவும், வழியனுப்பவும், ரோடு ேஷா வில் பங்கேற்பது; உடுமலைநலத்திட்ட வழங்கும் விழாவில் கட்சியினர், பயனாளிகளை அழைத்துச் சென்று பங்கேற்க செய்வது ஆகியன குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.