/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்: தாமதம் கூடாது'
/
'குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்: தாமதம் கூடாது'
ADDED : பிப் 04, 2025 07:25 AM

திருப்பூர்; குழந்தைகளின் சமூக பாதுகாப்பு, கல்வி, ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்வகையில், கிராமம், ஒன்றியம், பேரூராட்சி, மண்டலம், மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது. அரசு அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், போலீஸ், மருத்துவர், ஆசிரியர், தன்னார்வ தொண்டுநிறுவனத்தினர் என பல்வேறு துறை சார்ந்த, 14 பேர் குழந்தை பாதுகாப்புக்குழுவில் உறுப்பினராக அங்கம்வகிக்கின்றனர்.
குழந்தை திருமணங்களை தடுப்பது, பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வது, இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது, பதின்ம வயது கர்ப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு பணிகளை மேற்கொள்ளவேண்டியது குழந்தை பாதுகாப்பு குழுவினரின் கடமை.
இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தை பாதுகாப்புக்குழு செயலாளர்களுக்கான திறன் வளர்ச்சி கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமீபத்தில் நடந்தது. கிராம அளவில் வி.ஏ.ஓ., - ஒன்றிய அளவில் பி.டி.ஓ., - பேரூராட்சிகளில் செயல் அலுவலர்; நகராட்சிகளுக்கு கமிஷனர்; மாநகராட்சியில் மண்டல உதவி கமிஷனர்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குழு செயலாளர்களாக உள்ளனர். நேற்றைய கூட்டத்தில், இரண்டாம்நிலை, மூன்றாம் நிலையிலான அலுவலர்களே பங்கேற்றிருந்தனர்.
கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அமகது பாஷா பேசியதாவது:
குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டங்களை, வரும் நாட்களில், மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் நடத்தவேண்டும். மாவட்ட நிர்வாகம் நடப்பாண்டு, காலாண்டுக்கு ஒருமுறை வீதம் கூட்டம் நடத்தவேண்டிய தேதியை நிர்ணயம் கொடுத்துள்ளது. கிராமம், ஒன்றிய அளவிலான கூட்டங்கள், அந்தந்த காலாண்டில் முதல் மாதங்களான, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் மண்டல அளவில், அந்தந்த காலாண்டின் இரண்டாவது மாதங்களான, பிப்., மே, ஆக., நவ., மாதங்களில் நடத்த வேண்டும்.
-----
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தை பாதுகாப்புக்குழு செயலாளர்களுக்கான திறன் வளர்ச்சி கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா பேசினார்.