அவிநாசியில் சித்திரைத் தேரோட்டம்; ஏற்பாடுகள் கோலாகலம்
அவிநாசியில் சித்திரைத் தேரோட்டம்; ஏற்பாடுகள் கோலாகலம்
ADDED : ஏப் 26, 2026 10:58 PM

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 28 நடக்கிறது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய தேரைக் கொண்டதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நாயன்மார்களுக்குக் காட்சியளிக்கும் வைபவம் நேற்றுமுன்தினம் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் (28ம் தேதி) காலை 9:00 மணியளவில் தொடங்குகிறது. வடக்கு ரத வீதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா... நமச்சிவாய...' கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுக்க, முதல் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டமும், 30-ம் தேதி அம்மன் தேர் மற்றும் சுப்ரமணியர், கரி வரதராஜ பெருமாள் தேரோட்டங்களும் நடைபெறவுள்ளன.
மே 1-ம் தேதி பரிவேட்டையும், 2-ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. வரும் மே 4-ம் தேதி மஞ்சள் நீர் மற்றும் மயில்வாகனக் காட்சியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொண்டுள்ளன.
---
3 படங்கள்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆறாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கற்பக விருட்ச வாகனம் மற்றும் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீசந்திரசேகரப்பெருமான் - ஸ்ரீஆனந்தவல்லித் தாயார் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர்.
