தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சித்ரா – மித்ரா: எஸ்.ஐ.க்கு கிடைக்காத ‘நியாயம்’ செக்யூரிட்டியை மிரட்டும் ‘அநியாயம்’

சித்ரா – மித்ரா: எஸ்.ஐ.க்கு கிடைக்காத ‘நியாயம்’ செக்யூரிட்டியை மிரட்டும் ‘அநியாயம்’

சித்ரா – மித்ரா: எஸ்.ஐ.க்கு கிடைக்காத ‘நியாயம்’ செக்யூரிட்டியை மிரட்டும் ‘அநியாயம்’


UPDATED : அக் 06, 2026 01:27 AM

ADDED : அக் 05, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:27 AM ADDED : அக் 05, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘‘சித்ராக்கா... தாராபுரம் எலக்ஷன்ல யாரு ஜெயிப்பாங்க?’’

கேட்டுக்கொண்டே சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

‘‘மித்து... 9ம் தேதி சொல்றேன்... அன்னிக்குத்தானே ஓட்டு எண்ணுறாங்க!’’ என்று புன்னகைத்தாள் சித்ரா.

‘‘அக்கா... பின்னலாடை வாரியம் அமைக்கிறதா அறிவிப்பு வந்துச்சு... ஆனா, அமைஞ்ச பாடில்லை.

‘‘இதுக்கு கவர்மென்ட் அஞ்சு பைசா தரப்போறதில்லையாம். தொழில் அமைப்புகள்தான் நிதியாதாரத்தைத் திரட்டணுமாம். மொத்தம் ‘2சி’ கலெக்ட் பண்ணப் போறாங்களாம்.

‘‘ஒரு தலைவர், 2 துணைத்தலைவர் பதவியாம். ஆனா, அரசியல் தலையீடு இருக்காதாம். தொழில் அமைப்பினர் அறிக்கை சமர்ப்பிச்சாங்கன்னா ஆர்டர் போட்ருவாங்களாம்.’’

உஷாரா இருங்க...

‘‘மித்து... அரியவகை பாம்பு, எறும்புத்தின்னி, பறவைகளையெல்லாம் வனச்சட்டத்தை மீறி வீட்டுல வச்சிருந்தா, வனத்துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்றதோட, வச்சிருக்கிறவங்களையும் ‘துாக்கிடறாங்க’. இப்படி வச்சிருக்கிறவங்ககிட்ட வாங்கிட்டுப் போறவங்க பெரும்பாலும் வெளிமாவட்டத்துக்காரங்களாம்.

‘‘அவங்க சில பேர் மேல ஏற்கனவே வனக்குற்ற வழக்குகளும் நிலுவைல இருக்காம்.’’

‘‘ஆமாங்க்கா... உள்ளூர்க்காரங்கதான் உஷாரா இருக்கணும்... உள்ளாட்சி அமைப்புகளோட பதவிக்காலம் முடிஞ்சிடுச்சில்ல... மாவட்டத்துல இருக்கிற ஒன்றியத் தலைவர்கள் பயன்படுத்துன வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தோட கட்டுப்பாட்டுல இருக்குல்ல.

‘‘அந்த வாகனங்களை மாவட்டத் தலைமையிடத்துல பணிபுரியும், வாகனம் இல்லாத ஹையர் ஆபீசர்ஸ் பயன்படுத்துறாங்களாம். இதுல சில ஆபீசர்களோட குடும்பத்தினரும் வாகனங்களைப் பயன்படுத்துறாங்களாம்.’’

சான்று இழுத்தடிப்பு

‘‘மித்து... நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயும்ன்ற கதைதான் இது,

‘‘தெற்கு தாலுகாவுல இருக்கிற வி.ஏ.ஓ., ஆபீஸ்கள்ல இறப்புச்சான்றிதழுக்கு விண்ணப்பிச்சு ஒரு மாசமாகியும் சர்டிபிகேட் கிடைக்காம தவிக்கிறாங்களாம். வி.ஏ.ஓ., ஆபீஸ்ல கேட்டா, ரெண்டு நாள்ல சர்டிபிகேட் ரெடியாயிடும். ஆன்லைன்ல எடுத்துக்கலாம்’னு அனுப்பிடறாங்களாம்.

‘‘ரெண்டு நாள் கழிச்சு போனா மீண்டும் ‘இன்று போய் நாளை வா’ கதையாம்! தாலுகா அதிகாரிகள்ட்ட கேக்கலாம்னா, அவங்க செல்போன் அழைப்பையே எடுக்கிறதில்லையாம்.

‘‘வழக்கமா வாரிசு சர்டிபிகேட்டுக்குத்தான் மொய் வைக்க வேண்டியிருக்கும். இப்போ டெத் சர்டிபிகேட்டுக்குமான்னு மக்கள் ஆவேசப்படுறாங்களாம். கலெக்டர்ட்ட புகார் கொடுக்கவும் முடிவு செஞ்சிருக்காங்களாம்’’

‘‘அக்கா... மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைல பணியாற்றும் செக்யூரிட்டிகளை அத்துமீறி வாலிபர் மிரட்டுறதும், அதை போலீசார் கண்டுக்காததும் தொடர்கதையா இருக்கு...

‘‘போன வாரம், வாலிபர் ஒருத்தர் தாயைப் பார்க்க, குடும்பத்தினரோட வார்டுக்குள்ள நுழைஞ்சிருக்காரு. ‘இத்தனை பேரு உள்ளே வரக்கூடாது; ஒவ்வொருத்தரா வாங்க’ன்னு செக்யூரிட்டி சொல்லிருக்காரு.

‘‘உடனே அந்த வாலிபர், ‘நான் யாருன்னு தெரியும்ல... கத்தியால குத்திட்டுப் போயிடுவேன்’னு ரவுடி போல பேசியிருக்காரு. செக்யூரிட்டிகள் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்காங்க.’’

‘‘அதோட முடிஞ்சுதா?’’

‘‘இல்ல... இதைத் தெரிஞ்சுக்கிட்ட அந்த வாலிபர், ஒரு அமைப்பு பேரைச் சொல்லி, ‘16 வயசுல இருந்து அமைப்புல இருக்கேன். ஒரு போன் போதும்... கதையை முடிச்சிருவேன்’னு சீறியிருக்காரு. போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்காங்க. அந்த வீடியோவும் வைரலாச்சு. ஆனாலும் புகார் கிடப்பிலதான் கிடக்குதாம்.’’

போலீஸ் வேடிக்கை

‘‘மித்து... பல்லடம் பக்கத்துல இருக்கிற ‘நாயக்கன்பாளையம்’ போலீஸ் கன்ட்ரோல்ல இருக்கிற ‘கரடி’ ஊர் டாஸ்மாக் பார்ல, 24 மணி நேரமும் சரக்கு சேல்ஸ் ஆகுதாம். பக்கத்து வில்லேஜ்லயும் ஓபனா வச்சு விக்கிறாங்களாம்.’’

‘‘பப்ளிக் கம்ப்ளைன்ட் பண்ணலையா?’’

‘‘பார் நடத்துறவங்க மேல மர்டர் கேஸ் இருக்கறதால, பயப்படுறாங்களாம். போலீஸுக்கே இது தெரிஞ்சும், ஸ்டெப் எடுக்காம வேடிக்கை பார்க்கிறாங்களாம்.’’

‘‘அக்கா... ஊத்துக்குளி பக்கத்துல காலேஜ் பஸ் அதிவேகமா, விபத்து ஏற்படுற மாதிரி போனதைக் திருப்பூர் சிட்டில பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ., ஒருத்தர் தட்டிக்கேட்டிருக்காரு. அவரை காலேஜ் பசங்க உள்ளிட்ட சிலர் சேர்ந்து தாக்கியிருக்காங்க.’’

‘‘அதுக்கப்புறம்?’’

‘‘தாக்குனவங்க மேல ஊத்துக்குளி போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். அந்த எஸ்.எஸ்.ஐ., போதைல இருந்த மாதிரி ‘சீன்’ கிரியேட் பண்ணிட்டாங்களாம். போலீஸ் கமிஷனர்–எஸ்.பி., லெவல்ல தலையிட்டிருந்தா ஏக்ஷன் எடுத்திருக்க முடியுமாம். ஆனா, அது நடக்கலையாம்.’’

‘‘சரிக்கா... கொளுத்துது வெயில். நல்லா ஐஸ் போட்டு பைனாப்பிள் ஜூஸ் கொடுத்தீங்கன்னா குடிச்சிட்டுப் போய்டுவேன்.’’

‘‘மித்து... பைனாப்பிள் இல்ல. ஜில்லுனு மோர் கொண்டு வர்றேன்!’’ என்று கூறியவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us