/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிறிஸ்துமஸ்: ஜொலிக்கும் தேவாலயங்கள்
/
கிறிஸ்துமஸ்: ஜொலிக்கும் தேவாலயங்கள்
ADDED : டிச 23, 2024 11:49 PM

திருப்பூர்; கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை, இன்று, நள்ளிரவு திருப்பலியுடன் துவங்குகிறது.
கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்பு, பகிர்வு, நம்பிக்கையை மையப்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
டிச., மாதம் பிறந்து விட்டால், வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா களைகட்ட துவங்கி விடும். அந்த வகையில், வீடுகள், தேவாலயங்களின் முகப்பில் ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டன. குடில் அலங்கார் மற்றும் மரங்கள் வைக்கப்பட்டு, 'சீரியல் லைட்'களால் ஒளிரூட்டப்படும்.
ஒவ்வொரு தேவாலயங்கள் சார்பிலும், கிறிஸ்துமஸ் பூபாளக் குழுவினர் வீடு, வீடாக சென்று, பூபாளம் பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
'வீடுகளில் அமைதி, சமாதானம், சந்தோஷம் நிலவ வேண்டும்' என பூபாளக் குழுவினருடன் வரும் தேவாலய குருக்கள் பிரார்த்தனை ஏறெடுத்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர், நடன மாடி, வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு, பரிசுப்பொருட்கள் வழங்கி குஷிப்படுத்தினார்.
கிறிஸ்துமஸ் திருப்பலியை சிறப்பிக்கும் வகையில் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் குடில் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
நாளை காலையும், திருப்பலி நடக்கும். கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து திருப்பலியில் பங்கேற்பர். 'கேக்' உள்ளிட்ட பலகாரங்களை அக்கம் பக்கத்து வீட்டார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி மகிழ்வர்.