கஞ்சா சாக்லெட்ஒருவர் கைது
திருப்பூர் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்ட, ஒடிசாவைச் சேர்ந்த சித்தந்த குமார், 25, என்பவரை சோதனை செய்தனர்.
அவரிடம் 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்களும், 400 கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லெட்களும் இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, சித்தந்த குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
'குட்கா' பொருள்பதுக்கியவர் கைது
திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த ஒரு நபரை பிடித்து சோதித்த போது, அவரிடம் 1.8 கிலோ எடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் இருந்தது தெரிந்தது.
அனவுஸ் அன்சாரி, 29 என்ற அந்நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலைவிற்றவருக்கு அபராதம்
திருப்பூர் தெற்கு போலீசார், மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நடமாடிய ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 2.5 கிலோ எடையில் புகையிலை பாக்கெட்கள் இருந்தது தெரிந்தது. ஒடிசாவைச் சேர்ந்த லட்சுண் மண்டார்டி 49, என்ற அந்நபரை பிடித்த போலீசார், புகையிலை பொருட்களுடன் அவரை, உணவு பொருள் பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மது விற்றவர் கைது
திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில், அனுப்பர்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரிந்தது.
இதில் ஈடுபட்ட முத்துக்கருப்பன், 45 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா வியாபாரி மீது 'குண்டாஸ்'
திருப்பூர், தெற்கு போலீசார் பதிவு செய்த கஞ்சா வழக்கில், பாலகிருஷ்ணன் என்பவர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
நகை, பணம் திருட்டு
முத்துார் - காங்கயம் ரோடு, ரங்கபையன் காட்டுப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், 50; தொழிலாளி. நேற்று காலை, 10:30 மணியளவில், கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
மதியம், 12:30 மணிக்கு திரும்பிய போது, வீட்டின் கதவு மற்றும் பீரே உடைக்கப்பட்டு, 5 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.