ADDED : அக் 13, 2025 12:27 AM

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 13வது வார்டு, சாமிநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நுாறு மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
ஒரு நிரந்தர ஆசிரியர் மற்றும் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால், ஒரு வகுப்பறையில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களும், மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தனியொரு வகுப்பறையிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். இது மாணவர்களுக்கு இட நெருக்கடியையும், ஒரு வகுப்புக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது, மற்றொரு வகுப்பு மாணவர்களுக்கு இடையூறும் ஏற்படும் நிலை உள்ளது.
பள்ளி விளையாட்டு திடலில் கோவில், ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ளஅங்கன்வாடி மையத்தில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பழைய கட்டடத்தில் வகுப்பறை இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்ட போதிய இடவசதி இல்லை. பெற்றோர்கள் கூறுகையில், ''மாணவர் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது; போதிய ஆசிரியர்கள் நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.