ADDED : ஜன 23, 2025 11:51 PM
திருப்பூர்; அரசின் முக்கியமான சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கும்வகையில், முதல்வரின் முகவரித்துறை மூலம், தமிழகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023ல் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக, கடந்த 2023ல், தமிழகம் முழுவதும், நகர்புறங்களிலும், இரண்டாம் கட்டமாக, 2024ல், கிராமப்புறங்களிலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டன.
இம்முகாம்களில், அரசு துறை அதிகாரிகள், மக்களின் இடங்களுக்கே சென்று, மனுக்கள் பெறுகின்றனர். இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, கட்டட அனுமதி, புதுமைப்பெண் திட்ட பதிவு, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரும் மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு, தீர்வு காணப்படுகிறது. 15 அரசு துறைகள் வழங்கும், 44 சேவைகள் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மூன்றாம்கட்டமாக, தமிழகம் முழுவதும் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மாவட்டங்களில், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை உள்ளடக்கிய 184 தாலுகாக்களில் முகாம் நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2023ல், நகர்புறங்களில் நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில், 24,671 மனுக்கள்; 2024ல், கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களில் பெறப்பட்டவற்றில், 39,185 மனுக்கள் என, மொத்தம் 63,856 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது.
அரசு உத்தரவையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில், ஏழை மக்கள் வசிக்கும் கிராமங்களை பட்டியலிட்டு, எத்தனை முகாம்கள், எங்கெங்கு நடத்தவேண்டும் என்கிற திட்ட வரைவு தயாரிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சமூக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
மூன்றாவது கட்டமாக, ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாநகராட்சியில் உள்ள திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி நீங்கலாக, திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், மொத்தம் 70 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவையை பொருத்து முகாம்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அரசு உத்தரவு கிடைத்தவுடன், தேதி முடிவு செய்யப்பட்டு, முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
