/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுருள் வெள்ளைப்பூச்சியால் தென்னை கபளீகரம்
/
சுருள் வெள்ளைப்பூச்சியால் தென்னை கபளீகரம்
ADDED : பிப் 08, 2025 06:40 AM

திருப்பூர்; 'வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதலால், தென்னை மரங்களின் காய்ப்புத்திறன் குறைந்து வருகிறது' என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 1.40 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் தாலுகாக்களில், பிரதான பயிராக தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட இடங்களிலும் பெருமளவு விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
தற்போது, தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ளது. இதுவரையில்லாத அளவில், கிலோவுக்கு, 55 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற்று வருகின்றனர். இருப்பினும், சில மாதங்களாக தென்னை மரங்களில், வெள்ளை சுருள் ஈ பாதிப்பு துவங்கியுள்ளது. 'தென்னை மரங்களில் அதிகளவில் வெள்ளை ஈ பரவியுள்ள நிலையில், மரங்களின் பச்சையத்தை உறிஞ்சி வளர்வதால், காய்ப்புத்திறன் படிப்படியாக குறைந்து, மகசூல் பாதிக்கும்' என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
''தென்னையில் கருந்தலைப்புழு மற்றும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஆரம்ப நிலையில் ப்ரொக்கானிஸ் என்ற ஒட்டுண்ணியை வைக்க வேண்டும். இந்த ஒட்டுண்ணி, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும். ரூகோஸ் வெள்ளை ஈக்களை மேலாண்மை செய்ய என்கார்சியா என்ற இரை விழுங்கியை விடலாம்'' என, கோவை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுரை வழங்கியுள்ளது.