ADDED : ஜூன் 28, 2024 11:45 PM

உடுமலை:தென்னந்தோப்புகளில், ஓலைகளை எரிக்காமல், மட்க வைத்து உரமாக்கி பயன்படுத்தும் முறையை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களையும் மதிப்பு கூட்டி பயன்படுத்தலாம்.
ஆனால், அது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே இல்லை. முன்பு, மரங்களில் இருந்து விழும் மட்டை, ஓலைகளை தென்னந்தோப்புகளில் குவித்து, தீ வைத்து எரிப்பது வழக்கமாக இருந்தது.
இதனால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிவது உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது, தென்னை மட்டை, ஓலைகளை தீ வைத்து எரிக்கும் நடைமுறையை கைவிட்டனர். மாற்றாக, ஓலைகளை குழியில் சேகரித்து, மட்க வைப்பது; மூடாக்கு அமைப்பது ஆகிய நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். ஓலைகள் நேரடியாக மண்ணில் மட்குவதால், நுண்ணுயிர்கள் பாதிப்பது தவிர்க்கப்படுகிறது; மண் வளமும் அதிகரிக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சிலர் மட்டைகளை துாளாக்கி, தென்னை மரங்களின் வட்டப்பாத்தியில் இடும் நடைமுறையையும் பின்பற்றி வருகின்றனர்.