ADDED : டிச 31, 2024 04:38 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களில் பல நுாறு ஏக்கர் பரப்பளவிலும், பொங்கலுார், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் பரவலாகவும் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில்லாத அளவுக்கு தேங்காய் விலை உச்சத்தை தொட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கிலோவுக்கு, 58 ரூபாய் வரை விலை கிடைத்திருக்கிறது. இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், விளைச்சல் போதியளவில் இல்லாததால், கூடுதல் வருமானம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தென்னை விவசாயிகள் சிலர் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக தேங்காய்க்கு உரிய விலை இல்லை. விவசாயிகளின் தோட்டங்களில் இருந்து, ஒரு தேங்காய், 10.50 ரூபாய் முதல், 11.00 ரூபாய்க்கே வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். உர விலை இரட்டிப்பு, போக்குவரத்து செலவினம் அதிகரிப்பு, சாகுபடி செலவு அதிகரித்திருப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்த விலை போதுமானதாக இல்லை. குறைந்தபட்சம் ஒரு தேங்காய்க்கு, 23 முதல், 25 ரூபாய் விலை கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்.தேங்காய் விலை வீழ்ச்சியால், தோட்டங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தென்னை மரங்களை, தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால், நோய் தாக்குதல் ஏற்படும்; காய் பிடிக்கும் தன்மை குறைந்தது. அதன் பாதிப்பை தற்போது உணரத்துவங்குகிறோம். உரிய பராமரிப்பு இல்லாததால், தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்திருக்கிறது.