/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் தாக்குதலால் தேங்காய் மகசூல் பாதிப்பு விற்பனைக்கு தயக்கம்
/
நோய் தாக்குதலால் தேங்காய் மகசூல் பாதிப்பு விற்பனைக்கு தயக்கம்
நோய் தாக்குதலால் தேங்காய் மகசூல் பாதிப்பு விற்பனைக்கு தயக்கம்
நோய் தாக்குதலால் தேங்காய் மகசூல் பாதிப்பு விற்பனைக்கு தயக்கம்
ADDED : மே 12, 2025 11:28 PM

உடுமலை, ;திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. பி.ஏ.பி., பாசனமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. தென்னையிலும் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படுகின்றன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, தென்னை மரங்களில் வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட தொடர் நோய்த்தாக்குதலால், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டாலும், மரங்களில் காய்ப்பு திறன் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால், தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வழக்கமாக கோடை காலத்தில், தேங்காய் மகசூல் பிற சீசன்களை விட கூடுதலாக இருக்கும். ஆனால், இந்தாண்டு மகசூல் பாதியாக குறைந்துள்ளது. ஏக்கருக்கு, ஆயிரம் காய்கள் கூட மகசூல் கிடைப்பதில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை நிலையில்லாமல் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையிலும் ஏற்ற, இறக்கம் காணப்படுவதால், விவசாயிகள் அறுவடை செய்த தேங்காயை விற்பனை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பெரும்பாலான தோப்புகளில் தேங்காய் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசும், வேளாண் துறையும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.