/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழியும் தென்னை; அலட்சியத்தில் அரசு! உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேதனை
/
அழியும் தென்னை; அலட்சியத்தில் அரசு! உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேதனை
அழியும் தென்னை; அலட்சியத்தில் அரசு! உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேதனை
அழியும் தென்னை; அலட்சியத்தில் அரசு! உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேதனை
ADDED : ஏப் 01, 2025 10:21 PM
உடுமலை, ; 'நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் நோய்த்தாக்குதலால் வெட்டி அகற்றப்படும் நிலை ஏற்பட்டும், நிதி ஒதுக்கீடு செய்யாமல் தி.மு.க., அரசு அலட்சியமாக உள்ளது,' என தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் மட்டும், நீண்ட கால பயிராக, 10 லட்சம் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஓராண்டுக்கும் மேலாக, கேரள வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட தொடர் நோய்த்தாக்குதல்களால், தென்னை மரங்கள் காய்ப்புத்திறன் இழந்து, மரங்களை வெட்டி அகற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வழக்கமாக, கோடை காலத்தில் ஏக்கருக்கு, 2 ஆயிரத்துக்கும் அதிகமான தேங்காய்களை அறுவடை செய்ய முடியும். நடப்பாண்டு காய்ப்பு திறன் ஏக்கருக்கு, 500 தேங்காய்கள் கூட கிடைக்காத நிலை உள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தவும், தோப்புகளை மறு சீரமைப்பு செய்யவும், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை.
கடந்தாண்டு பெயரளவுக்கு, தென்னை வேர் வாடல் நோய் மீட்பு திட்டத்துக்கு, 14.04 கோடி ரூபாய் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிதியும் திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த பெரும்பாலான விவசாயிகளை சென்று சேரவில்லை. மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் ஜெயமணி கூறியதாவது: தென்னை சாகுபடியாளர்களின் எந்த கோரிக்கையையும் தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. நோய்த்தாக்குதலால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் பல லட்சம் தென்னை மரங்களை வெட்டி அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2022ம் ஆண்டு வரை, மத்திய தென்னை வாரியத்தின் வாயிலாக செயல்விளக்க திடல், நோய் தாக்கிய மரங்களை அகற்றி மறு சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிதி, தென்னை வளர்ச்சி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
பின்னர், வேளாண், தோட்டக்கலைத்துறைக்கு இந்த நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு மாற்றம் செய்தது. இதையடுத்து, சில ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு முற்றிலுமாக குறைந்து, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை.
தமிழக வேளாண் பட்ஜெட்டிலும், ஆண்டுதோறும் தென்னை சாகுபடி முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது.
நோய்த்தாக்குதலால் பாதித்த தென்னை மரங்களை கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும்; தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களை மீண்டும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.

