/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடியும் நிலையில் கால்நடை குடிநீர் தொட்டி: கிராமங்களில் வேதனை
/
இடியும் நிலையில் கால்நடை குடிநீர் தொட்டி: கிராமங்களில் வேதனை
இடியும் நிலையில் கால்நடை குடிநீர் தொட்டி: கிராமங்களில் வேதனை
இடியும் நிலையில் கால்நடை குடிநீர் தொட்டி: கிராமங்களில் வேதனை
ADDED : ஜன 08, 2024 01:21 AM
உடுமலை:கால்நடை குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர, குழாய் அமைத்தல், போர்வெல் சீரமைத்தல் உட்பட பணிகளில், ஊராட்சி நிர்வாகத்தினர் ஆர்வம் காட்டாததால், செலவிடப்பட்ட அரசு நிதி முற்றிலும் வீணடிக்கப்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களிலுள்ள, 72 ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கிராமங்களில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகளின் தாகம் தீர்க்க, இத்திட்டத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொட்டிக்கு, தண்ணீர் கொண்டு வருவதற்கான கட்டமைப்புகளையும் மேம்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதற்காக, தொட்டிகளின் அளவு அடிப்படையில், ரூ.20 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொட்டி கட்டி முடிக்கப்பட்டாலும், அருகிலுள்ள போர்வெல்களில் இருந்து, தண்ணீர் கொண்டு வர எவ்வித வசதிகளும், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.
பல இடங்களில், தண்ணீர் தொட்டி அருகிலுள்ள, போர்வெல்களுக்கு, மின் இணைப்பு கூட வழங்கப்படவில்லை. இதனால், போர்வெல், தண்ணீர் தொட்டி உட்பட அனைத்து கட்டமைப்புகளும் பயன்பாடு இல்லாமல், வீணாகி வருகின்றன.
பருவமழைக்குப்பிறகு, மேய்ச்சல் நிலங்களில், பசுந்தீவனம் அதிகரித்துள்ள நிலையில், பால் உற்பத்திக்காக கால்நடைகளை பராமரிப்பது அதிகரித்துள்ளது.
இவ்வாறு, மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் கால்நடைகள், தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால், பாதிக்கப்படுகின்றன. பல தொட்டிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு, இடிந்து வருகிறது.
எனவே, மூன்று ஒன்றியங்களிலும், கட்டப்பட்ட கால்நடை தண்ணீர் தொட்டிகளின் நிலை குறித்து, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.