/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்.ஓ.சி., பெற்று தருவதாக வசூல் வேட்டை
/
என்.ஓ.சி., பெற்று தருவதாக வசூல் வேட்டை
ADDED : ஜூன் 12, 2025 05:12 AM
பல்லடம் : பல்லடத்தில், தடை நீக்கப்பட்ட வக்ப் வாரிய நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற்று தருவதாக கூறி, சிலர், வசூல் வேட்டையில் ஈடுபடுவதால், அதிகாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடத்தில், பலர் இடத்தை விற்பனை செய்ய முடியாமலும், குத்தகை, அடமானம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த, 2022 ஜூன் மாதம், சென்னை, வக்ப் வாரிய முதன்மை செயல் அலுவலர் ரபியுல்லா, பல்லடம் சார் பதிவாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில், பல்லடம் தாலூகாவில் உள்ள வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை, அதன் சர்வே எண்ணுடன் குறிப்பிட்டு, தடையின்மை சான்று இல்லாமல் அந்நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
வக்ப் வாரிய முதன்மை செயல் அலுவலரின் கடிதம் குறித்த தகவல் பாதிக்கப்பட்ட யாருக்கும் தெரியவில்லை. சமீபத்தில், பல்லடத்தில் வசிக்கும் நபர் ஒருவர், இது தொடர்பாக விசாரிக்கும் போது, இது குறித்து தெரியவந்தது.
நாரணாபுரம் கிராமத்தில், 587/19, 587/42, 335, 472, 602/1, 596/பி2, 587/1 நத்தம் 587/19 நத்தம்; பல்லடம் கிராமத்தில், 268/2சி, 269/12, 853/28, 269/20, 310/3ஏ, 308/2ஏ; கண்டியன் கோவில் கிராமத்தில், 745 மற்றும் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில், 283 ஆகிய சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது என்பதால், இந்த சர்வே எண்ணில் உள்ளவர்கள் இவற்றுக்கு தடையின்மை சான்று பெற்றுக் கொள்ள முடியும்.
தகவல் குறித்து அறியாத, போதிய புரிதல் இல்லாத பொதுமக்களிடம், தடையின்மை சான்று பெற்றுத் தருவதாக கூறி, சிலர் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் பாதிக்காத வகையில், பதிவுத்துறை மற்றும் வருவாய் துறையினர் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.