/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 முடித்தவுடன் உயர்கல்வியில் இணைய வேண்டும்! மாணவ, மாணவியருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
/
பிளஸ் 2 முடித்தவுடன் உயர்கல்வியில் இணைய வேண்டும்! மாணவ, மாணவியருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
பிளஸ் 2 முடித்தவுடன் உயர்கல்வியில் இணைய வேண்டும்! மாணவ, மாணவியருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
பிளஸ் 2 முடித்தவுடன் உயர்கல்வியில் இணைய வேண்டும்! மாணவ, மாணவியருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2025 11:05 PM

திருப்பூர்; 'படிப்பை பாதியிலேயே கைவிடுவது, குழந்தை திருமணத்தின் முதல் படியாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி படிப்பு முடிக்கும் மாணவ, மாணவியர் நுாறு சதவீதம் பேர், உயர் கல்வியை தொடரச் செய்ய வேண்டும்,' என, கலெக்டர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி, நேற்று துவங்கியது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி வரவேற்றார்.
பயிற்சியை துவக்கி வைத்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
குழந்தை திருமணத்துக்கு, பள்ளி இடைநிற்றல் முதல் படியாக உள்ளது. எனவே, மாணவ, மாணவியர் பள்ளி இடைநிற்றலை தடுப்பதிலும், அனைவரும் உயர்கல்விக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளிப்படிப்பை தொடரச் செய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 97 சதவீத மாணவ, மாணவியர் உயர்கல்வியில் இணைந்து விடுகின்றனர். மீதம் மூன்று சதவீத மாணவர்கள் மீதும் கவனம் செலுத்தி, நுாறு சதவீதத்தை எட்டுவதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் உள்பட பொது இடங்களில், 1098 என்கிற சைல்டு ஹெல்ப் லைன் எண் குறித்த விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் மீதான வன் கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களில், பெண் தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.
நிறுவனங்களில் கட்டாயம் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். பணியிடங்களில் பாலியல் ரீதியான பிரச்னைகள் தொடர்பான புகார்களை பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
போராட வேண்டும்
சாக் ஷி தன்னார்வ தொண்டு நிறுவன திட்ட மேலாளர் நஞ்சுண்ட மூர்த்தி பேசியதாவது:
பணியிடங்களில், சக பணியாளர்கள், உயர் நிலை பதவிகளில் உள்ளவர்களால், பெண்கள் பலவிதமான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பாலியல் சீண்டல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும்போது, அடுத்தகட்டமாக, பதவி உயர்வை நிறுத்திவைப்பது, கூடுதல் நேரம் பணிபுரியச் செய்வது; அதிக பணிப்பளுவை ஏற்படுத்துவது போன்ற நெருக்கடிகளை கொடுப்பர். இத்தகைய செயல்களும், பாலியல் துன்புறுத்தலாகவே கருதப்படும்.
அனைத்து நிறுவனங்களிலும், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கும், புகார் பதிவு செய்வது, பாதிக்கப்பட்டவர்களின் துயரை போக்குவதற்கான கட்டமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலருக்கும் சமமான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள், வேலை போய்விடும், நமது பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றெல்லாம் பயந்தும், சகிப்புத்தன்மையோடும் விட்டுவிடக்கூடாது. துணிச்சலோடு எதிர்த்து போராடவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக நலத்துறை, கல்வித்துறை, போலீசார், தன்னார்வ அமைப்பினர் மொத்தம் 50 பேர் இப் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாலியல் சீண்டல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும்போது, அடுத்தகட்டமாக, பதவி உயர்வை நிறுத்திவைப்பது, அதிக பணிப்பளுவை ஏற்படுத்துவது போன்ற நெருக்கடிகளை கொடுப்பர். இத்தகைய செயல்களும், பாலியல் துன்புறுத்தலாகவே கருதப்படும்