/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கலெக்டர் சார்... மலை போல நம்பியிருக்கோம்'
/
'கலெக்டர் சார்... மலை போல நம்பியிருக்கோம்'
ADDED : அக் 08, 2024 12:42 AM

குழியில் விழும் வாகனங்கள்
அனுப்புநர்
பொதுமக்கள்
மானுார்பாளையம்,
சடையபாளையம்
ஊராட்சி
பொருள்: விபத்து
தடுத்தல்.
ஐயா
மானுார்பாளையத்தில், புதிதாக ரோடு அமைக்கும் பணி நடந்துள்ளது. தார்ரோடு அமைக்கும் போது இருபுறமும் மண் எடுத்து குழியாக மாற்றப்பட்டது. பணி முடிந்த பிறகு, இருபுறமும் மண் கொட்டி சமன் செய்யவில்லை. வாகனங்கள், குழியில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.
நன்றி.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
அனுப்புநர்
பொதுமக்கள்
வெள்ளிரவெளி
குன்னத்துார்
பொருள்: ஆக்கிரமிப்பு
ஐயா
வெள்ளிரவெளி கிராம நத்தம் இடத்தை, சிலர் முறைகேடாக ஆக்கிரமித்து வைத்துள்ளனர்; அரசு நிலத்தை மீட்க வேண்டும்.
நன்றி.
ஐ.ஏ.எஸ்.,அதிகாரி தேவை
அனுப்புநர்
சண்முகசுந்தரம்
தலைவர்
நல்லுார் நுகர்வோர்
மன்றம்.
பொருள்: அதிகாரி
நியமித்தல்
ஐயா
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளிலும், மக்களுக்கான வளர்ச்சி பணிகள் சீராக நடக்கவும்; அரசு திட்டங்கள் சரிவர செயல்படவும், ஐ.ஏ.எஸ்., நிலை அதிகாரியை, மாநகராட்சி கமிஷனராக நியமிக்க வேண்டும்; நிர்வாக பணி பாதிக்கும் என்பதால், உடனடியாக கமிஷனர் நியமனத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்.
நன்றி.
'பார்க்கிங்' கட்டணக் கொள்ளை
அனுப்புநர்
சரவணன் மற்றும்
பொதுமக்கள்
தாளக்கரை
அவிநாசி
பொருள்: பார்க்கிங்
முறைகேடு
ஐயா
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை அதிகளவில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்கின்றனர். வாகனங்களை நிறுத்த, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரசீதில், தேதி, வரிசை எண், கோவில் பெயர் போன்ற எவ்விவரமும் இல்லை. 'டூ வீலர் ' 10 ரூபாய், நான்கு சக்கர வாகனம் -20 ரூபாய், டிராவல்ஸ் -50 ரூபாய் என்று அச்சிட்டு கட்டணம் பெறுகின்றனர். குறிப்பாக, வாடகை காரில் சென்றாலும், 50 ரூபாய் கட்டண வசூல் செய்கின்றனர்.
வாகனத்தை எடுக்கும் போது, மீண்டும் 'டோக்கன்' பெற்று, வைத்து, மற்றொருவருக்கு கொடுக்கின்றனர். பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். போலியான ரசீது கொடுத்து கட்டண கொள்ளை நடக்கிறது. ரசீதில், எவ்வித முறையான தகவலும் இல்லை; வரிசை எண் இல்லை. பக்தர்கள் கேட்ட போது, 'அப்படித்தான் வசூலிப்போம்; எங்கு சென்றாலும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று பகிரங்கமாக சவால் விடுகின்றனர். 'பார்க்கிங்' வசதியை மேம்படுத்தி, கட்டணவசூலை முறைப்படுத்த வேண்டும்.
நன்றி.
சுருங்கிய நீரோடை
அனுப்புநர்
பொதுமக்கள்
சங்கோதிபாளையம்
கோடங்கிபாளையம்
ஊராட்சி
பொருள்: சுருங்கிய
நீரோடை
ஐயா
காரணம்பேட்டையில் இருந்து கரடிவாவி செல்லும் ரோட்டில் இருந்து, காந்தி நகர் செல்லும் ரோட்டுக்கு எதிரே, ஜெ.கே.என்., கார்டன் செல்லும் பாதை உள்ளது. ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பாதையில், தார்ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பாதையின் அருகே, பெரிய நீரோடை உள்ளது. அங்குள்ள பாதையை அருகே உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரிய நீரோடையாகவும், பாதையும் இருந்த இடத்தில், நீரோடை சுருங்கியுள்ளது. வருவாய்த்துறை வரைபடத்தில் உள்ளபடி, நீரோடையை அகலமாக விட வேண்டும். ரோடு அமைக்கும் பாதையை மீண்டும் அளவீடு செய்து, நீரோடைக்கும், மக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில், ரோடு அமைக்கப்பட வேண்டும். நீரோடையில், கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பராமரிக்க வேண்டும்.
நன்றி.